ஜோகூர் பாரு, மே 17 – நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5,000 பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான பக்காத்தான் ஹராப்பான் (PH) மாநாடு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
எதிர்வரவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் (PRN) மற்றும் 16-ஆவது பொதுத் தேர்தலை (PRU16) எதிர்கொள்வதற்காகக் கட்சியின் தேர்தல் இயந்திரத்தைத் தயார்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறுகிறது.
மலேசியப் பிரதமரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று பிற்பகலில் நடைபெறும் இம்மாநாட்டின் உச்சக்கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதோடு, மாநாட்டையும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.
"தெக்காட் மடாணி, ஹராப்பான் ராக்யாட்" (Tekad MADANI, Harapan Rakyat) எனும் கருப்பொருளைக் கொண்டுள்ள இந்த ஒருநாள் மாநாடு, ஜோகூர் பாருவில் உள்ள பெர்சாடா சர்வதேச மாநாட்டு மையத்தில் (Persada Johor) இன்று காலை 8:30 மணிக்குத் தொடங்கியது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பல்வேறு அரசியல் பிரிவுகளின் கலந்துரையாடல் (Town Hall) மற்றும் மாநில அளவிலான தலைவர்களின் உரைகளுடன் மாநாட்டின் காலை உரைத் தொடர் அரங்கேறியது.
இதனைத் தொடர்ந்து, கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ‘தலைவர் மன்றக் கூட்டம்’ (Majlis Presiden) மதியம் 1:30 மணியளவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் டிஏபி (DAP) கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோணி லோக், அமானா (Amanah) கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 3:35 மணியளவில் அமையவிருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்புரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மிக விரைவில் நடைபெறவிருக்கும் ஜோகூர் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான கூட்டணியின் மூலோபாய வழிகாட்டுதல்கள் குறித்தும், 16-ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்கி ஒற்றுமை அரசாங்கத்தின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவர் தனது உரையில் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் உரைகளுக்குப் புறம்பாக, அடிமட்ட அளவில் தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்காகத் தேர்தல் இயந்திரத் தொகுப்புகள் (Kit Jentera Pilihan Raya) வழங்கும் அடையாளப் பூர்வ நிகழ்வும் இந்த மாநாட்டில் இடம்பெறவுள்ளது.
இன்று காலை முதலே பெர்சாடா ஜோகூர் மாநாட்டு மைய வளாகம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான பிகேஆர் (PKR), டிஏபி (DAP) மற்றும் அமானா (Amanah) ஆகிய கட்சிகளின் சீருடைகளை அணிந்த பிரதிநிதிகளின் வருகையால் பெரும் உற்சாகத்துடன் காணப்படுகிறது. இது இக்கூட்டணியின் ஒற்றுமையையும் தேர்தல் தயாரிப்பையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.








