ஷா ஆலம், மே 12: பெட்டாலிங் ஜெயாவிலுள்ள புகழ்பெற்ற 223 உணவகப் பகுதியை (Medan Selera 223) அண்மையில் தாக்கிய திடீர் வெள்ளத்திற்கு, அங்குள்ள பழைய வடிகால் அமைப்பினால் அதிகப்படியான மழைநீரை வெளியேற்ற முடியாததே முதன்மைக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள சிலாங்கூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று தொழில்நுட்பக் குழுவினருடன் ஆய்வு நடத்திய பின்னர் இத்தகவலை மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான செயற்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம், தெரிவித்தார்.
தற்போதைய வடிகால் அமைப்பு தற்கால மழைப்பொழிவின் அளவைத் தாங்கும் திறன் கொண்டதாக இல்லை என்பதைத் தொழில்நுட்ப ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஷாம், "மழைக்காலங்களில் நீர் வெளியேறுவதில் ஏற்படும் தடையைக் கண்டறிய தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் நீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்ய, வடிகால் கட்டமைப்பை உடனடியாகத் தரம் உயர்த்த வேண்டியது அவசியம் என்பது கள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உடனடித் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு முகமைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இத்தகைய திடீர் வெள்ளச் சம்பவங்கள் வணிகர்களின் வருமானத்தைப் பாதிப்பதோடு, அந்த இடத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிகளையும் சீர்குலைப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதிலும் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின்போது, பெட்டாலிங் ஜெயா கெஅடிலான் (KEADILAN) கிளைத் தலைவர் ஹீ லோய் சியான், தாமான் மேடான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹலிமே அபு பாக்கார் மற்றும் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS), பொதுப்பணித் துறை (JKR), பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) ஆகியவற்றின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் விரைவில் அப்பகுதியில் வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.









