கோலாலம்பூர், மே 13 - சிலாங்கூர் மாநிலத்தின் பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, சுற்றுச்சூழல் பாதிப்பற்ற ஹைட்ரஜன் ஆற்றலில் இயங்கும் பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாநிலத்தில் பசுமைப் போக்குவரத்து முறைக்கு மாறுவதை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறைக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் திட்டத்தின் வெற்றிகரமான அமலாக்கம் மூன்று முக்கிய அம்சங்களைச் சார்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதாவது, ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் மின்னாற்பகுப்பு வசதி, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் பேருந்துகளின் தயார்நிலை ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதற்காக, சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்தின் துணை நிறுவனமான வேர்ல்டுவைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், பத்தாங் காலியில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 12 மீட்டர் நீளம் கொண்ட சுமார் 40 பயணிகள் பயணிக்கக்கூடிய முதல் ஹைட்ரஜன் பேருந்து ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சின் ஒத்துழைப்போடு பூச்சோங் உத்தாமாவில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலத்தின் தற்போதைய 160 பேருந்துகளையும் 2030-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக மின்சாரப் பேருந்துகளாக மாற்றும் இலக்கை சிலாங்கூர் அரசு கொண்டுள்ள வேளையில், ஏற்கனவே 26 மின்சாரப் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர், நகர்ப்புற இணைப்பை மேம்படுத்தும் வகையில் மைக்ரோ-மொபிலிட்டி எனப்படும் நுண்-போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். இதன் ஒரு பகுதியாக, ஷா ஆலம் பெர்சியாரான் சுல்தானில் கூரையுடன் கூடிய நடைபாதைகள் மற்றும் மிதிவண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டப் பணிகள் இந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைபாதை சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தையும், ஷா ஆலம் நகர மையத்தையும் இணைக்கும் வகையில் அமையும்.
இதன் அடுத்தகட்டமாக, வரவிருக்கும் எல்.ஆர்.டி 3 (LRT3) வழித்தடத்தின் டத்தோ மந்திரி நிலையத்துடனும் இந்த நடைபாதை இணைக்கப்படும்.
எல்.ஆர்.டி 3 சேவை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் தனது செயல்பாட்டைத் தொடங்கவுள்ள நிலையில், முதற்கட்ட மற்றும் இறுதிக்கட்ட இணைப்புகளை (First and last mile) வலுப்படுத்தும் நோக்கில், 10 புதிய மண்டலங்களில் டி.ஆர்.டி (DRT) சேவையை விரிவுபடுத்த ரேபிட் கே.எல் (Rapid KL) திட்டமிட்டுள்ளது.
மாநில மக்களின் வசதிக்காகப் பொதுப் போக்குவரத்து, நுண்-போக்குவரத்து மற்றும் பசுமைத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்த ஒரு முழுமையான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதே மாநில அரசின் இறுதி நோக்கம் என்று இங் ஸீ ஹான் சுட்டிக்காட்டினார்.








