ஷா ஆலம், மே 8 - கெடா மாநிலம், சுங்கை பட்டாணிக்கு அருகிலுள்ள பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் (Bandar Sri Astana) இன்று அதிகாலை நிகழ்ந்த ஒரு பயங்கரமான தீ விபத்தில், 18 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் 50 வயதுடைய நபர் ஒருவர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 4.54 மணிக்கு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) தகவல் கிடைத்ததாகக் கெடா மண்டலம் 2-இன் மூத்த அதிகாரி பிரையன் டெல் புங்கியஸ் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டபோது, அதிகாலை 5.23 மணியளவில் வீட்டின் மேல்தளப் பகுதியில் (Loteng) அந்த இளைஞர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த சுகாதார அமைச்சக ஊழியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். வீட்டின் முன்பகுதியில் தொடங்கிய தீ, மிக வேகமாகப் பரவி வீட்டின் கட்டமைப்பில் சுமார் 80 சதவீதத்தை முற்றாகச் சேதப்படுத்தியுள்ளது.
தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீர் மற்றும் அருகில் இருந்த தீயணைப்புத் துவாரங்களைப் பயன்படுத்திப் போராடிய வீரர்கள், காலை 5.41 மணிக்குத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காலை 9.02 மணிக்கு மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்தன. இந்தத் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் ஏற்பட்ட சொத்து இழப்புகளின் மதிப்பு குறித்து காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








