சிறுவர்கள் நலனை மேம்படுத்த யுனிசெஃப் (UNICEF) உடன் சிலாங்கூர் அரசு கைகோர்ப்பு

6 மே 2026, 9:11 AM
சிறுவர்கள் நலனை மேம்படுத்த யுனிசெஃப் (UNICEF) உடன் சிலாங்கூர் அரசு கைகோர்ப்பு

ஷா ஆலம், மே 6: சிலாங்கூர் மாநிலத்தில் சமூகக் கொள்கைகளை வலுப்படுத்தவும், மகளிர் மற்றும் சிறுவர்களின் நலனை மேம்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்துடன் (UNICEF) இணைந்து செயல்பட மாநில அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

மலேசியாவிற்கான யுனிசெஃப் பிரதிநிதி ராபர்ட் கிளாஸ் தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியைச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துதல், ஆரம்பக்கால குழந்தை மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய சமூகப் பாதுகாப்பு முறை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் மகளிர் மேம்பாடு மற்றும் நலத்துறைக்கான மாநிலச் செயற்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரியும் கலந்து கொண்டார்.

"தரவுகளின் அடிப்படையிலான அணுகுமுறை, குறிப்பாகக் குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள சிறுவர்களின் விவரங்களைச் சேகரிப்பதன் மூலம், அரசாங்கத்தின் கொள்கைகள் சரியான இலக்கைச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும்," என்று மந்திரி புசார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவிலேயே யுனிசெஃப் அமைப்பின் 'சிறுவர் நட்பு நகரம்' (Child-Friendly City) அங்கீகாரத்தைப் பெற்ற முதல் நகரமாக பெட்டாலிங் ஜெயா திகழ்வது பெருமைக்குரியது என்றாலும், மாநிலம் முழுவதும் இத்தகைய பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவில் 70 ஆண்டுகால அனுபவம் கொண்ட யுனிசெஃப் அமைப்பின் ஒத்துழைப்பு, சிலாங்கூர் அரசின் 'மாமாகெர்ஜா' (MamaKerja), 'அசோ பிந்தார்' (Asuh Pintar) மற்றும் பராமரிப்புப் பொருளாதாரக் கட்டமைப்பு (Care Economy) போன்ற திட்டங்களுக்குக் கூடுதல் வலிமை சேர்க்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாரம்பரியமான 'மேலிருந்து கீழ்' (Top-down) என்ற அணுகுமுறையைத் தவிர்த்து, தரைமட்ட நிலவரங்களை நன்கு அறிந்த ஊராட்சி மன்றங்கள் (PBT) இதில் ஈடுபடுத்த வேண்டும் என்று அமிருடின் ஷாரி கேட்டுக்கொண்டார்.

"குடும்பங்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விவகாரங்களில் நாம் நிகழ்நேரத் தரவுகளுடன் (Real-time data) செயல்பட வேண்டும். தரவுகள் வேகமாக மாறக்கூடியவை என்பதால், அதற்கு ஏற்ப நாம் நெகிழ்வான அணுகுமுறைகளைக் கையாளத் தயாராக இருக்க வேண்டும்," என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.