சிலாங்கூர் சுல்தானை இழிவுபடுத்தும் சமூக ஊடகப் பதிவுகள்: கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

27 ஏப்ரல் 2026, 2:29 AM
சிலாங்கூர் சுல்தானை இழிவுபடுத்தும் சமூக ஊடகப் பதிவுகள்: கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஷா ஆலம், ஏப்ரல் 27: மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) உடனடியாகக் கண்காணித்து, அவற்றை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பான, நெறிமுறையான மற்றும் பொறுப்பான இணைய ஊடக சூழலை உறுதி செய்வதில் தொடர்பு அமைச்சும் முக்கியப் பங்காற்றுகிறது என்று இஸ்லாமிய சமய விவகார ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ங்கா கூறினார்.

பொதுமக்களிடையே ஊடகங்களை விவேகமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முயற்சிகளை அந்த அமைச்சு தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

"பல இனங்கள் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் சூழலில், மக்களின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் எந்தவொரு செயலும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்."

"இனங்களுக்கிடையிலான உறவைப் பேணுவதற்கும், மாநிலத்தின் அமைதி தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நாம் அனைவரும் பொறுப்பு."

"அவமதிப்பு, அவதூறு அல்லது ஆத்திரமூட்டும் வகையிலான உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது," என்று அவர் ஓர் அறிக்கையின் மூலம் கூறினார்.

முன்னதாக, மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஹாராபுடின் இட்ரிஸ் ஷா அல்
ஹாஜ் அவர்களைத் தொடர்புபடுத்தி, பன்றியின் மீது அரண்மனை பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டது போன்ற திருத்தப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

இந்தச் செயலை மிகவும் நாகரிகமற்ற செயல் என்றும், சமூக நெறிகளை மீறுவதாகவும், அரச நிறுவனத்தின் மீதான மரியாதைக்கு முரணானது என்றும் டாக்டர் முகமட்
ஃபஹ்மி விவரித்தார்.

இது பல இன மற்றும் மத மக்களிடையே பதட்டத்தைத் தூண்டக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.

"அரச நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும் மிகவும் வருந்தத்தக்க மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்."

"சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது உடனடியாக விசாரணை நடத்தி, நாட்டின் சட்டங்களுக்கு இணங்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நான் காவல்துறையை வலியுறுத்துகிறேன்," என்றார் அவர்.

முன்னதாக, முதலீட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸ்ஸீ ஹான், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது நாட்டின் சட்ட விதிகளுக்கு ஏற்ப கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டார்.

பண்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறுகையில், நாட்டில் நடைமுறையில் உள்ள பேச்சு சுதந்திரம் எந்தவொரு தரப்பினரையும், குறிப்பாக அரச நிறுவனத்தை அவமதிப்பதற்கான உரிமம் அல்ல என்றார்.

நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது காவல்துறையும் SKMM-மும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.