ஷா ஆலம், ஏப்ரல் 23: சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, மலேசியாக் காவல்துறை (PDRM) அதிகாரி போல் நடித்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சுபாங் ஜெயா மாவட்டத் துணைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஃபைருஸ் ஜாஃபர் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையின் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடை மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்த காணொளிப் பதிவு குறித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடந்ததாக நம்பப்படுகிறது என்றும், பின்னர் அந்த காணொளி டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"விசாரணைக்கு உதவ சுபாங் ஜெயாவின் யுஎஸ்ஜே (USJ) பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்."
"சந்தேக நபர் மேல் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். சட்டப்பூர்வ அனுமதியின்றி காவல்துறை சீருடை மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தியதற்காக 1967 காவல்துறை சட்டத்தின் 89வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அவமதித்ததற்காகக் குற்றவியல் சட்டத்தின் 504வது பிரிவின் கீழும், பொது இடத்தில் அவமானகரமாக நடந்து கொண்டதற்காக 1955ஆம் ஆண்டு சிறிய குற்றங்கள் சட்டத்தின் 14வது பிரிவின் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
மேலும், இழிவான உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதற்காக 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
"இந்த வழக்கு தொடர்பாகப் பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ, சுபாங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை 03-7862 7222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்," என்றார்.








