மலேசியாவை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் மையமாக பயன்படுத்தும் கும்பல்கள் - அயோப் கான்

24 ஏப்ரல் 2026, 3:12 AM
மலேசியாவை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் மையமாக பயன்படுத்தும் கும்பல்கள் - அயோப் கான்

ஜார்ஜ் டவுன்: அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மலேசியா தொடர்ந்து ஒரு முக்கிய இடைத்தங்கல் நாடாகவே நீடிக்கிறது என்று துணைத் தேசியக் காவல்துறைத் தலைவர் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார். குறிப்பாக, "தங்க முக்கோணப்" பகுதியில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருட்கள், தீபகற்பத்தின் வடக்கு எல்லை வழியாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர் பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

மலேசியாவின் அமைவிடம் இப்பகுதிக்கு அருகே இருப்பதால், அது அனைத்துலக கும்பல்களுக்கு ஒரு முக்கிய வழித்தடமாக அமைந்துள்ளது.

"தங்க முக்கோணப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் போதைப்பொருட்கள் தீபகற்பத்தின் வடக்குப் பகுதிக்குள் நுழைவதற்கு மலேசியா நீண்ட காலமாகவே ஒரு இடைத்தங்கல் நாடாக இருந்து வருகிறது. நாம் போதைப்பொருளை உற்பத்தி செய்யும் நாடு அல்ல, ஆனால் கடத்தல் மையமாக இருக்கிறோம். இவற்றில் ஒரு சிறிய பகுதி உள்நாட்டுப் பயன்பாட்டிற்கும் செல்கிறது," என்றார் அவர்.

"புள்ளிவிவரங்களின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் விஷப் பொருட்களின் மொத்த மதிப்பு 310 கோடி ரிங்கிட் ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டும் 91.5 கோடி ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று பினாங்கு குற்றவியல் மற்றும் பொதுப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் (CCPSS) மன்றத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருள் கும்பல்களை ஒடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இது மலேசியாவை கடத்தல் மையமாகப் பயன்படுத்தும் கும்பல்களின் நடவடிக்கைகளைத் தடுப்பதில் காவல்துறையின் உறுதியைப் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீபகற்பத்தின் வடக்குப் பகுதிகளில் கடல் மற்றும் தரைவழிப் பாதைகளையும், சபா மற்றும் சரவாக்கில் கடல் மற்றும் வான் வழிப் பாதைகளையும் கடத்தல் கும்பல்கள் பயன்படுத்துவதாகவும், விமான நிலையங்களிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அயோப் கான் தெரிவித்தார்.

நாட்டின் எல்லைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், இதுபோன்ற நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு உளவுத்துறைத் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்றார்.

இதனைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளை வலுப்படுத்த, அண்டை நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளுடன் காவல்துறை நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மேலும், போதைப்பொருள் விநியோகக் கும்பல்களின் முழு வலையமைப்பின் மீதும் நடவடிக்கை எடுக்க வகைசெய்யும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (SOSMA) கீழ் அணுகுமுறைகள் தொடர்ந்து வலுப்படுத்தப் பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

"கும்பல் தலைவர்கள், விநியோகிப்பாளர்கள் அல்லது போதைப் பொருளைத் தயாரிப்பவர்கள் என அனைவரும் திட்டமிட்ட குற்றவியல் அணுகுமுறையின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் மூலம் முழு கும்பலையும் முடக்கி, ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.