பயோடீசல் (Biodiesel) புதிய மாற்று எரிசக்தி ஆதாரமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளது – அகமது ஜாஹிட்

20 ஏப்ரல் 2026, 5:06 AM
பயோடீசல் (Biodiesel) புதிய மாற்று எரிசக்தி ஆதாரமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளது – அகமது ஜாஹிட்

ஷா ஆலாம்: மலேசியாவில் தற்போது மாதம் ஒன்றுக்கு சுமார் 1.5 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட 19 பயோடீசல் உற்பத்தி ஆலைகள் உள்ளதாகவும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இது ஒரு புதிய மாற்று எரிசக்தி ஆதாரமாக மாறும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகவும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அரசாங்க நிறுவனங்களுக்கும் தோட்டத் துறை தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் இந்த பயோடீசல் உற்பத்தி முயற்சி தேசிய பொருளாதாரச் செயல் மன்றத்தில் (MTEN) சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

"தற்போது B15 முதல் B50 வரையிலான 19 பயோடீசல் உற்பத்தி ஆலைகள் உள்ளன. பதப்படுத்தப்படாத செம்பனை எண்ணெயை (CPO) உற்பத்தி செய்வதிலிருந்து கிடைக்கும் 35 விழுக்காடு கசடு அல்லது துணைப் பொருட்களைப் பயன்படுத்தி பயோடீசல் மற்றும் ஜெட் ஏ1 எரிபொருளைத் தயாரிப்போம்," என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த முயற்சி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. தேசிய பொருளாதாரச் செயல் மன்றமும் இந்தக் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் நாங்கள் இதை ஒருங்கிணைப்போம். இந்த 19 ஆலைகளுடன் இணைந்து செயல் படுவதன் மூலம் உற்பத்தி செலவு குறையும் என எதிர்பார்க்கிறோம்," என்றார் அவர்.

இங்குள்ள ரிஸ்மார்ட் மளிகை அங்காடிகளை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் ரிஸ்டா தலைவர் மான்ட்ஜ்ரி நசிப்பும் கலந்து கொண்டார்.

ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சருமான அஹ்மட் ஜாஹிட், பெரிய அளவிலான உற்பத்தி, செயல் பாட்டுச் செலவுகளைக் குறைத்து, எரிபொருளின் ஒட்டுமொத்த விலையைக் குறைக்கும் என்று அரசாங்கம் எதிர் பார்ப்பதாகக் கூறினார்.

வாகனங்களில் பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நீண்ட கால அடிப்படையில் டீசல் விலையை நிலைப்படுத்தி குறைக்கும் ஆற்றல் பயோடீசலுக்கு உண்டு என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"நாங்கள் சோதனை ஓட்டங்களைச் செய்துள்ளோம். பெட்ரோனாஸும் இந்த டீசல் மீது சோதனைகளை நடத்தியுள்ளது. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த பயோடீசல் பொருந்துவதை உறுதி செய்ய பல வாகன உற்பத்தி நிறுவனங்களுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.