செப்பக் தக்ரோ விளையாட்டை இன ஒற்றுமைக்கானச் சின்னமாக மாற்ற பிரதமர் அழைப்பு

14 ஏப்ரல் 2026, 7:17 AM
செப்பக் தக்ரோ விளையாட்டை இன ஒற்றுமைக்கானச் சின்னமாக மாற்ற பிரதமர் அழைப்பு

செபாக் தக்ரா விளையாட்டை ஒரு தேசிய மரபுடைமை விளையாட்டாகவும், தேசிய ஒற்றுமையின் சின்னமாகவும் உயர்த்துவதற்காக, அதில் பல்லின மக்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு (KBS)  முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார்.

செப்பாக் தக்ரா விளையாட்டு, குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள சமூகத்தின் வாழ்வில் நீண்ட காலமாக வேரூன்றியுள்ளதால், ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்றும், கிட்டத்தட்ட அனைத்துத் தலைமுறையினரும் இந்த விளையாட்டை அறிந்திருக்கிறார்கள் என்றும் அன்வார் கூறினார்.

இந்த விளையாட்டை வலுப்படுத்தும் முயற்சிகள் சங்கங்கள் அல்லது வீரர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விரிவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

"ஆரம்பத்தில், மலாய் இளைஞர்கள்தான் செபாக் தக்ரா மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தனர் என்பது உண்மை. இது சீன இளைஞர்கள் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டுவதைப் போன்றது," என்று அவர் கூறினார்.

"ஆனால், மற்ற இனங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டு பங்கேற்பதை உறுதி செய்வதே இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பங்கு. அதேபோல, மலாய் பிள்ளைகளும் மற்ற விளையாட்டுகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்பட வேண்டும்," என்று அவர் இன்று இங்குள்ள மலேசிய செபாக் தக்ரா அகாடமி வளாகத்தின் திறப்பு விழாவில் உரையாற்றும்போது கூறினார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முஹம்மது தௌஃபிக் ஜொஹாரி, பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசுப் பிரதேசம்) ஹன்னா இயோ மற்றும் மலேசிய செபாக் தக்ரா கூட்டமைப்பின் (PSM) தலைவர் டத்தோ முகமட் சுமாளி ரெடுவான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செபாக் தக்ராவின் முக்கிய பலம் அதன் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் வரலாற்று மதிப்புகளில் உள்ளது என்றும், மலாய் வரலாற்று நூல்களில் கூட இது பற்றிய கதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

"இரண்டாவதாக, செபாக் தக்ரா நாட்டிற்குள் மட்டுமல்லாமல், உலக அளவிலும் வளர்ந்துள்ளது. எனவே, இதற்குப் பயிற்சி, ஒழுக்கம் மற்றும் முழுமையான வசதிகள் தேவை. அல்ஹம்துலில்லாஹ், இப்போது அந்த வசதிகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம்," என்றார் அவர்.

அதே நேரத்தில், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரான ஹன்னா இயோவை, செபாக் தக்ரா விளையாட்டை ஒரு பாரம்பரிய விளையாட்டாக மேம்படுத்துவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக அன்வார் பாராட்டினார். இந்த விளையாட்டின் ரசிகர்கள் பெரும்பாலும் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், நாட்டின் தலைமைத்துவத்தின் முதிர்ச்சியை இது காட்டுகிறது என்றார்.

"நாம் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். இதில் ஈடுபட்டுள்ள பிள்ளைகள், இதுதான் இன்றைய மலேசியா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விளையாட்டை நாம் உயர்த்தி, குறுகிய இனவாத எண்ணங்களை அகற்றுவோம்," என்று அவர் மேலும் கூறினார்.

"நமக்கிடையே அன்பைக் காட்டுவோம், விளையாட்டின் மூலம் நாம் சமூகத்தை முதிர்ச்சியடையச் செய்ய முடியும் என்பதை நிரூபிப்போம்," என்றார் அவர்.

இனப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், விளையாட்டின் தரம் மற்றும் மலேசியர் என்ற பெருமையின் அடிப்படையில் வெற்றியை மக்கள் மதிப்பிட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

"கடந்த ஆண்டு பாங்காக், தாய்லாந்தில் செபாக் தக்ராவின் வெற்றியைப் பார்த்தபோது, வீரர்கள் பெரும்பான்மையாக மலாய்க்காரர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் பெருமைப்பட்டோம். இந்த உணர்வைத்தான் நாம் முன்னிலைப்படுத்தி பரப்ப விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

"ஆர்வம், ஒழுக்கம் மற்றும் பயிற்சி இல்லாமல், நாம் உயர் நிலையை அடைவது சாத்தியமில்லை," என்று அன்வார் கூறினார்.

கடந்த டிசம்பரில், 2025 ஆம் ஆண்டுக்கான சீ விளையாட்டுப் போட்டிகளில், தேசிய செபாக் தக்ரா அணி, ஆண்கள் அணி ரெகு பிரிவில் 34 ஆண்டு கால தங்கப் பதக்கப் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. போட்டியை நடத்திய தாய்லாந்தை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.