ஷா ஆலம், ஏப்ரல் 3: எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகச் செய்யாத மாணவர்கள் உட்பட அனைத்து பட்டதாரிகளும், தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டமான திவெட் துறையைத் தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு மாற்று வழியாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள். திறன் சார்ந்த வேலை வாய்ப்புகளைப் பெருக்க இது ஒரு சிறந்த வழி என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வி.பாப்பாராய்டு கூறினார்.
தேர்வில் சிறப்பாகச் செயல்படாத மாணவர்கள் கல்வி நீரோட்டத்தில் இருந்து பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
"தேர்வில் சிறப்பாகச் செய்யாதவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். உங்கள் வாய்ப்புகள் இன்னும் பரந்த அளவில் உள்ளன. வெற்றி என்பது தேர்வு முடிவுகளால் மட்டும் அளவிடப்படுவதில்லை, மாறாக முயற்சி, விடாமுயற்சி மற்றும் மீண்டும் எழுந்து நிற்கத் தேவையான தைரியம் ஆகியவற்றால் அளவிடப்படுகிறது."
"இந்தத் தொழிற்கல்வி பாதை ஒரு நல்ல எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், நாட்டிற்குத் தேவைப்படும் திறமையான தொழிலாளர்களையும் உருவாக்கும்," என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அதே வேளையில், கோல லங்காட் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார். தேர்வெழுதிய 4,056 மாணவர்களில் 88.29 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
"பதிவு செய்த 4,124 மாணவர்களில், 4,056 பேர் தேர்வெழுதினர். தேர்ச்சி விகிதம் 88.29 விழுக்காடாகவும், பள்ளி சராசரி கிரேடு (GPS) 4.92 ஆகவும் பதிவாகியுள்ளது. இது திருப்திகரமான நிலையாகும்."
"இருப்பினும், 35.48 விழுக்காடு மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி நிலையிலும், 10.08 விழுக்காட்டினர் திருப்திகரமான நிலையை எட்டாமலும் உள்ளனர். இவர்களுக்குத் தொடர்ச்சியான கவனமும் தலையீடும் தேவை," என்றார் அவர்.
இப்பகுதியில் உள்ள மாணவர்களிடையே காணப்படும் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக, 100 மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பந்திங் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.பி.எம். தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களை அங்கீகரிக்கும் திட்டத்தின் கீழ், அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுவதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார்.
"இந்த முயற்சியின் கீழ், ஒவ்வொரு மாணவரும் அவர்களின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக ஒரு முறை வழங்கப்படும் ஊக்கத்தொகையாக 500 ரிங்கிட் ரொக்கப் பணத்தைப் பெறுவார்கள்."
"இந்த பங்களிப்பு நிதி உதவியாக மட்டுமல்லாமல், அவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கையில் மேலும் முன்னேறிச் செல்வதற்கான ஓர் ஊக்கத்தின் சின்னமாகும்," என்றார்.
சிறந்த கல்வியை ஒரு கலாச்சாரமாக மாற்றுவதற்கும், சமூகத்தில் கல்வியை வலுப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், கோல லங்காட் பகுதியைச் சேர்ந்த ஓராங் அஸ்லி மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்றிருப்பதற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
"இந்தச் சாதனை மிகவும் பெருமைக்குரியது, சமூகங்களுக்கிடையிலான கல்வி இடைவெளியைக் குறைப்பதில் அடைந்த வெற்றியைக் காட்டுகிறது."
"சரியான வாய்ப்பும் ஆதரவும் கிடைத்தால், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் சிறந்து விளங்க முடியும் என்பதையும் இது நிரூபிக்கிறது," என்று அவர் கூறினார்.
இறுதியாக, தனது தொகுதியில் உள்ள குழந்தைகளின் நலன் மற்றும் கல்விக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்ற தனது உறுதியையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
"பந்திங் தொகுதியில் எந்தவொரு குழந்தையும் பின்தங்கிவிடாமல் இருப்பதை நான் உறுதி செய்வேன், ஒவ்வொரு வெற்றியும் தொடர்ந்து ஒன்றாகக் கொண்டாடப்படும்," என்றார்.
எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் திவெட் துறையைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்படுகிறார்கள்
3 ஏப்ரல் 2026, 4:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய பந்திங் சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
Shalini Rajamogun
3 ஏப்ரல் 2026

selangor
இந்திய சமூகத் தலைவர்களின் பங்கை வலுப்படுத்த, தகுதித் தேர்வைச் சிலாங்கூர் அரசு அறிமுகம் செய்கிறது
Shalini Rajamogun, Evelyn Moses
13 ஏப்ரல் 2026

selangor
‘ஜோப்கேர்’ வேலைவாய்ப்பு சந்தை கோலா லங்காட்டில் நாளை தொடங்குகிறது: 40,000 வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

selangor
பழங்குடியினர் கிராமத்தில் சோலார் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன - பாப்பாராய்டு
Shalini Rajamogun
9 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




