கோலாலம்பூர், மார்ச் 28: கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (கேஎல்சிசி) அமைந்துள்ள ஜாலான் அம்பாங்கில், உரிமம் பெறாத புகைப் படக்காரர்களின் ('உலாட் போட்டோ') நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில், அப்பகுதியில் விரைவில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்படவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இப்பகுதியில் சிசிடிவி-க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கேஎல்சிசி சொத்து ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஆகியவை இணைந்து செயல் படும் என்று கூட்டரசுப் பிரதேசங்களுக்கான அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
"சிசிடிவி-க்கள் கேஎல்சிசி நிர்வாகத்தின் கீழ் உள்ளன. அனுமதி இல்லாமல் இதுபோன்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் முகங்களை அடையாளம் காண, வெளிப் புறங்களில் எவ்வாறு கூடுதல் சிசிடிவி-க்களைப் பொருத்தலாம் என்பது குறித்து நான் அவர்களுடன் கலந்துரையாடுவேன்," என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கேஎல்சிசி வளாகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் உரிமம் பெறாத புகைப் படக்காரர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுக்க முயன்ற ஆடவர் ஒருவரை, 18 புகைப்படக்காரர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொடராமல் இருக்க, போலீஸ் மற்றும் டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகள் அப்பகுதியில் அடிக்கடி ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹன்னா இயோ கேட்டுக்கொண்டார்.
"சுற்றுலாப் பயணிகளும் மலேசியர்களும் துன்புறுத்தப்படுவதை நாங்கள் விரும்ப வில்லை. ஏனெனில் இது நாட்டின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சண்டைகள் நடந்திருக்கக் கூடாது. இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் போலீசாரைக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
நேற்றைய தினம், 17 முதல் 45 வயதுக்குட்பட்ட உரிமம் பெறாத 18 புகைப்படக்காரர்கள் கேஎல்சிசி வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, தண்டனைச் சட்டம் பிரிவு 148-இன் கீழ் மேலதிக விசாரணைக்காக விசாரிக்கப்பட்டு வருவதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சசாலி ஆடம் தெரிவித்திருந்தார்.
இதேவேளையில், வங்சா மாஜுவில் உள்ள ஒரு மசாஜ் மையத்திடம் பணம் கேட்டதாகக் கூறப்படும் கூட்டரசுப் பிரதேச மக்கள் பிரதிநிதித்துவ மன்ற (MPPWP) உறுப்பினர்கள் தொடர்பான விவகாரம் குறித்து டிபிகேஎல் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் ஹன்னா இயோ தெரிவித்தார்.
"MPPWP உறுப்பினர்கள் களத்திற்குச் செல்ல எந்தக் காரணமும் இல்லை, ஏனெனில் அது டிபிகேஎல்லின் அதிகார வரம்பிற்குட்பட்டது. புகார்களைக் கேட்டு அவற்றை டிபிகேஎல்லிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே MPPWP-யின் பங்கு; அவர்கள் அமலாக்க அதிகாரிகள் அல்ல. இது மிகவும் தெளிவான ஒன்று," என்று செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
அண்மையில், ஒரு மசாஜ் மையத்தின் சிசிடிவி காணொளி ஒன்று வைரலானது. அதில், தங்களை MPPWP உறுப்பினர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், அப்பகுதியில் இருந்து புகார்கள் வந்திருப்பதாகவும், அந்த மையத்தை மூடுவதைத் தவிர்க்க பணம் கேட்டதாகவும் பதிவாகியிருந்தது.
கேஎல்சிசி-யில் 'உலாட் போட்டோ' தொல்லைக்கு முற்றுப்புள்ளி: கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தப்படும்
28 மார்ச் 2026, 1:12 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
போதையில் வாகனம் ஓட்டி சிவப்பு விளக்கை மீறிய குற்றத்திற்காக, பெண் ஓட்டுநருக்கு ஒருநாள் சிறைத் தண்டனை, RM13,000 அபராதம்
Pakiya
22 ஏப்ரல் 2026

selangor
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சக அதிகாரிகள் 790 போலி கைக் கடிகாரங்களை பறிமுதல் செய்து, ஆடவரை கைது செய்தனர்
Pakiya
18 மார்ச் 2026

national
நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் தாக்கல்
Mavitthran
2 மார்ச் 2026

national
கோலாலம்பூரில் சட்டவிரோதக் கிளினிக்குகள்: அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும்
Shalini Rajamogun
20 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




