போதையில் வாகனம் ஓட்டி சிவப்பு விளக்கை மீறிய குற்றத்திற்காக, பெண் ஓட்டுநருக்கு  ஒருநாள் சிறைத் தண்டனை, RM13,000 அபராதம்  

22 ஏப்ரல் 2026, 7:18 AM
போதையில் வாகனம் ஓட்டி சிவப்பு விளக்கை மீறிய குற்றத்திற்காக, பெண் ஓட்டுநருக்கு  ஒருநாள் சிறைத் தண்டனை, RM13,000 அபராதம்  

கோலாலம்பூர்: மது போதையில் வாகனம் ஓட்டி சிவப்பு விளக்கை மீறிய குற்றத்திற்காக, பெண் ஓட்டுநர் ஒருவருக்கு கோலாலம்பூர் போக்குவரத்து நீதிமன்றம் ஒருநாள் சிறைத்தண்டனையும், RM 13,000 அபராதமும் விதித்தது.

நேற்று நடந்த இந்த வழக்கில், 42 வயதான அப்பெண் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அபராதத்தை செலுத்தத் தவறினால், அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் இரண்டு ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 45A(1)-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி, குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமட் சம்ஸூரி முகமட் ஈசா தெரிவித்தார்.

ஜாலான் கெந்திங் கிளாங்கில் உள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்பில் இரவு 8.22 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அவர் கூறினார். இதில் BMW X1 ரக மகிழுந்து ஒன்றும், யமஹா LC135 ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் சம்பந்தப் பட்டிருந்தன.

"ஆரம்பக்கட்ட விசாரணையில், மகிழுந்தை ஓட்டிவந்த அப்பெண்மணி, சிவப்பு விளக்கு எரிந்தபோது நிற்கத் தவறி, பச்சை விளக்கில் நேராகச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது தெரியவந்துள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தின் விளைவாக, 22 வயதான மோட்டார் சைக்கிளோட்டிக்கு வலது முழங்காலில் லேசான வீக்கம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த 15 வயது பெண் அல்லது மகிழுந்து ஓட்டுநருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

மேலும், அப்பெண் ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட மதுபானப் பரிசோதனையில், அவரது இரத்தத்தில் 100 மில்லிலிட்டருக்கு 183 மில்லிகிராம் ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது, இது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும்.

இதனையடுத்து, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 45A(1)-இன் கீழ் காவல்துறை விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. பின்னர், அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், இந்த வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதற்காக அதே சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் முகமட் சம்ஸூரி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், 03-2071 9999 என்ற எண்ணில் துன் எச்.எஸ். லீ போக்குவரத்து காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.