SELANGOR

ஸ்ரீ மூடா, கோத்தா கெமுனிங்கில் அந்நியர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகரிப்பு- விரைந்து நடவடிக்கை எடுக்க பிரகாஷ் கோரிக்கை

27 ஆகஸ்ட் 2024, 4:25 AM
ஸ்ரீ மூடா, கோத்தா கெமுனிங்கில் அந்நியர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகரிப்பு- விரைந்து நடவடிக்கை எடுக்க பிரகாஷ் கோரிக்கை

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஆக. 27- தாமான் ஸ்ரீ மூடா மற்றும் கோத்தா கெமுனிங் வட்டாரத்தில் அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவது குறித்து கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் கவலை தெரிவித்துள்ளார்.

பொது அமைதிக்கும் வட்டார மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இத்தகையச் சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோனை அவர் கேட்டுக் கொண்டார்.

இத்தகைய குற்றச் செயல்களைத் துடைத்தொழிப்பதற்கு ஏதுவாக உள்துறை அமைச்சும்  அரசாங்கத் துறைகளும் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தினார்.

நாட்டின் சட்டதிட்டங்களை அந்நியத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் அதேவேளையில் அதனை பின்பற்றி நடப்பதும் அவசியமாகும்  எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்நிய நாட்டினர் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் தவிர்த்து, முறையான ஆவணமில்லாத அந்நிய பிரஜைகளின் குடியேற்றம், அவர்களின் குடியிருப்புகளில் காணப்படும் தூய்மையின்மை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அவர்களால் ஏற்படும் தொந்தரவு ஆகியவையும் பிரச்சனைக்குரிய விஷயங்களாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்நியக் குடியேறிகளின் குடியிருப்புகள் பெரும்பாலும் சுத்தமாக இருப்பதில்லை. இதனால் அசௌகரியமான சூழலும் வட்டார மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. ஆகவே, தங்கள் தொழிலாளர்கள் முறையான ஆவணங்களைக் கொண்டிருப்பதை முதலாளிகள் உறுதி செய்யும் அதேவேளையில்  தூய்மை தொடர்பான விதிமுறைகளை அவர்கள் பின்பற்றுவதையும் கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.

அந்நியத் தொழிலாளர்களின் தவறான செயல்களுக்கு முதலாளிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்திய பிரகாஷ், தங்கள் ஊழியர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது உறுதி செய்யும் பொறுப்பை முதலாளிகள் முறையாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக உள்துறை அமைச்சு சட்ட அமலாக்கத்தை  வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.