ஷா ஆலம், அக் 7- பெண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தை விவாதிப்பதற்கு அனுமதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவை சபாநாயகரிடம் மேல் முறையீடு செய்துள்ளார்.
நேற்று அவையில் நிராகரிக்கப்பட்ட பெண்டோரா பேப்பர்ஸ் விவகாரங்களை விவாதிப்பது மீதான தீர்மானத்தை விரைவுபடுத்தும்படி கோரும் அந்த முறையீட்டு கடிதத்தை அவர் சபாநாயகர் டத்தோ அஸ்ஹார் ஹருணுக்கு அனுப்பியுள்ளார்.
பெண்டோரா பேப்பர்ஸ் விவகாரங்கள் மீதான விவாதங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். இந்த தீர்மானம் மீதான எனது முறையீடு விரைந்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அன்வார் தெரிவித்தார்.
நாட்டின் பல தலைவர்களின் நிதி தொடர்பான கோப்புகளை அம்பலப்படுத்திய அந்த பெண்டோரோ பேப்பர்ஸ் விவகாரத்தை விவாதிப்பதற்கு அன்வார் கொண்டு வந்த தீர்மானத்தை மக்களவை நேற்று நிராகரித்தது.
கூட்டத் தொடருக்காக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை ஒத்தி வைக்க வேண்டி வரும் என்பதால் இந்த தீர்மானத்தை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று டத்தோ அஸ்ஹார் தெரிவித்தார்.
இந்த பெண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தை மேலும் விரிவாக விவாதிப்பதற்கு ஏதுவாக அதனை நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக்குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.








