ஷா ஆலம், செப் 23 ;- கோவிட்-19 நோய்த் தொற்று குறையத் தொடங்கியுள்ளதால் செலாயாங் மற்றும் செர்டாங் மருத்துவமனைகள் ஹைப்ரிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
இவ்விரு மருத்துவமனைகளும் கோவிட்-19 நோய்க்கான பிரத்தியேக சிகிச்சை மையங்கள் என்ற நிலையிலிருந்து இம்மாதம் மத்தியில் மாற்றப்பட்டு தற்போது ஹைப்ரிட் மருத்துவனைகளாக செயல்படுகின்றன என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 சம்பவங்கள் குறைந்தது மற்றும் அந்நோயிலிருந்து குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது ஆகிய காரணங்களால் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் செர்டாங் மற்றும் செலாயாங் மருத்துவமனைகள் ஹைப்ரிட் மருத்துவமனைகளுக்கான அந்தஸ்தை மீண்டும் பெறும் என்றார் அவர்.
இனி அனைத்து நோயாளிகளும் சிகிச்சைக்காக அம்பாங் மற்றும் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுவர் என்று இங்குள்ள சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள எட்டு மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி 5,012 ஆக இருந்த கட்டில்களின் பயன்பாடு இம்மாதம் 21 ஆம் தேதி 2,891 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே காலக்கட்டத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 327 ஆக இருந்த கட்டில்களின் பயன்பாடு நேற்று 231 ஆக குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,656 ஆக உள்ள வேளையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதிக மக்கள் தொகை காரணமாக பெட்டாலிங், உலு லங்காட், கிள்ளான் ஆகிய மாவட்டங்களின் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது என்றார் அவர்.








