ஷா ஆலம், செப் 22- நீர் வளங்கள் மாசுபடுவதை தவிர்க்கும் நோக்கில் கிழக்கு கரை ரயில் திட்டம் (இ.சி.ஆர்.எல்.) தெற்கு வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சிலாங்கூர் அரசின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோம்பாக்-செரெண்டா-கோலக்கிள்ளான் தடத்தை உள்ளடக்கிய அந்த இரயில் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் இடர் மதிப்பீடு நேற்று தொடங்கி இம்மாதம் 19 ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதானது, தனது திட்டத்தில் புத்ரா ஜெயா உறுதியாக இருப்பதை பிரதிபலிப்பதாக உள்ளது என்று மாநில சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
உலு லங்காட், சிப்பாங், கோலக்கிள்ளான் வழியாக இந்த இரயில் திட்டத்தை மேற்கொள்வதற்கு மட்டுமே சிலாங்கூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சுங்கை சிலாங்கூர் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் வழியாக செல்லக் கூடிய வடக்கு வழித்தடத்தில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி மாநில மறுப்பு தெரிவித்து வருகிறது என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்தினால் நீர் மாசுபடும் பட்சத்தில் சுங்கை சிலாங்கூர் ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நீர் சுத்திகரிப்பு மையங்களும் ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையமும் மூடப்படும் அபாயம் ஏற்படும். இதனால் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள சுமார் 70 விழுக்காட்டு குடியிருப்பாளர்கள் நீர் விநியோக பாதிப்பை எதிர்நோக்க வேண்டி வரும் என்றார் அவர்.
மத்திய அரசின் இந்த தன்மூப்பான போக்கு காரணமாக இத்திட்டத்திற்கான நில ஆர்ஜிதப் பணிகளுக்கு மாநில அரசு உதவி புரியாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.








