பெட்டாலிங் ஜெயா, செப் 20- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட கம்போங் துங்கு தொகுதியைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 அமல்படுத்தப்பட்ட போது ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவுப் பொருள் விநியோகப் பணி வசதி குறைந்தவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தற்போது வரை தொடரப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.
நாங்கள் உணவுக் கூடைகளை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, நோயுற்றவர்களுக்கு மருந்துகள் வாங்குவது உள்ளிட்ட சுகாதாரப் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இதுதவிர குழந்தைகள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியோருக்கு பால்மாவு, பெம்பர்ஸ் போன்றவற்றை வழங்கும் பணியிலும் தொகுதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தொகுதி நிலையில் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் தடுப்பூசித் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் களத்தில் இறங்க பணியாற்ற வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கடந்த மாதம் 23 ஆம் மாநில சட்டமன்றக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய போது வலியுறுத்தியிருந்தார்.








