கோலாலம்பூர், ஆக 10- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் (பிக்) கடந்த பிப்ரவரி மாதம் முதல் நேற்று வரை 2 கோடியே 50 லட்சத்து 8 ஆயிரத்து 230 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 59 ஆயிரத்து 596 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 90 லட்சத்து 48 ஆயிரத்து 534 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
நாட்டிலுள்ள பெரியவர்களில் 68.2 விழுக்காட்டினருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் 38.7 விழுக்காட்டினருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே, நேற்று நாடு முழுவதும் 465,793 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 187,793 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் 278,390 பேருக்கு இரண்டாது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது என்றார் அவர்.
நாட்டில் கோவிட்-19 பெருதொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் கடந்த பிப்வரி மாதம் தொடங்கப்பட்டது.








