ஷா ஆலம், ஆக 9- உச்ச வரம்பு விலையை மீறி அதிக விலையில் செம்பனை சமையல் எண்ணெயை விற்பனை செய்வோருக்கு எதிராக இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமது ஜிக்கிர் அஸான் அப்துல்லா கூறினார்.
இன்னும் சில வணிகர்கள் அரசாங்கம் நிர்ணயித்ததை விட அதிக விலையில் சமையல் எண்ணெயை விற்பனை செய்து வருவதாக கூறிய அவர், சோதனை நடவடிக்கைகளின் போது விலை நிர்ணயம் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என அவர்கள் கூறுவதாக சொன்னார்.
இம்மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 21 வணிகர்களுக்கு எழுத்துப்பூர்வமான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் அவர்.
எனினும், வணிக மையங்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் விதிகளை மீறுவோர் மீது இன்று தொடங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணைய்க்கான புதிய நிலையை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு கடந்த மாதம் 28 ஆம் தேதி அறிவித்தது.
அதன்படி, ஒரு கிலோ அசல் செம்பனை சமையல் எண்ணெய் கிலோ வெ. 6.70 ஆகவும் 2 கிலோ எண்ணைய் வெ.12.70 ஆகவும் 3 கிலோ எண்ணெய் வெ.18.70 ஆகவும் 5 கிலோ எண்ணெய் வெ.29.70 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.








