புத்ராஜெயா, 6 ஜூன் - மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா) கீழ் உள்ள 270 தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) நிறுவனங்கள், தங்கள் பட்டதாரிகளுக்கு கிட்டத்தட்ட 99.5 விழுக்காடு வேலைவாய்ப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளன என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தேசிய TVET மன்றத்தின் தலைவருமான அவர், இந்த பெருமைக்குரிய சாதனை, மாரா TVET நிறுவனங்கள் தற்போது TVET 2.0 கட்டத்தை அடைந்துள்ள நாட்டின் TVET திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணி வகிப்பதை நிரூபிக்கிறது என்றார்.
"புதிய பாடத்திட்டங்களை வழங்குவது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட TVET நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்குவதன் மூலம் நாடு தழுவிய TVET திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் தனியார் துறையினர் முன்னணியில் இருப்பதை நான் மிகவும் பாராட்டுகிறேன்," என்று அவர் கூறினார்.
"அவர்கள் TVET 2.0-ஐ நான் குறிப்பிட்ட பல்வேறு பங்களிப்புகளுடன் வரவேற்பது மட்டுமல்லா, தேசிய TVET மன்றம் மற்றும் மலேசியாவில் உள்ள பெரும்பாலான TVET நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன் மூலம், அனைத்து TVET மாணவர்களும் தொழில் துறையில் 100 விழுக்காடு வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்," என்று இன்று இங்கு நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய TVET தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.
புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தையும், TVET 2.0-ஐயும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்தார்.ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சருமான அஹமட் ஜாஹிட், TVET 2.0 அமலாக்கமானது, ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), இணையப் பொருட்கள் (IoT) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற அதிக வேலை வாய்ப்புகளைக் கொண்ட புதிய துறைகளில் அதிக கவனம் செலுத்தும் என்றும், அதே நேரத்தில் பாரம்பரிய துறைகளும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
"TVET 2.0-இல், நான் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் துறைகளைத் தவிர, குறிப்பிட்ட TVET நிறுவனங்களின் பயிற்றுநர்களை அரசாங்க நிதியில்லாமல், வெளிநாட்டுத் தொழில் துறையினரின் நிதியுதவியுடன் இலவசமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளோம்," என்று அவர் கூறினார்.
மேலும், தொழில்துறையினர் TVET பட்டதாரிகளுக்கு பிரீமியம் சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர். மலேசிய திறன் சான்றிதழ் (SKM) படிப்பை முடித்தவர்களுக்கு குறைந்த பட்சம் ரிம 2,500 வழங்கப்படும், இது தற்போதைய குறைந்தபட்ச சம்பள விகிதத்தை விட அதிகமாகும்.
நாடு தழுவிய TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த மே மாத இறுதியில் 98.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும், இது முன்பு 95.1 விழுக்காடாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்."இது நாம் நன்றி சொல்ல வேண்டிய ஒரு சாதனை. நான் அடிக்கடி சொல்வது போல், வெற்றியை அடைவது கடினம், ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்வது இன்னும் கடினம்.
நமது கடமை அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து மேம்படுத்துவதும் ஆகும்," என்று அவர் கூறினார்.இதற்கிடையில், மாஹாட் தஃபீஸ் மற்றும் பொண்டோக் பள்ளி மாணவர்களுக்கும் இப்போது UniKL வழங்கும் திட்டங்கள் மூலம் விண்வெளிப் பொறியியல் மற்றும் கடல்சார் பொறியியல் உள்ளிட்ட TVET துறைகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அஹ்மட் ஜாஹிட் கூறினார்.
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக வலையமைப்பில் (MTUN) உள்ள ஏழு பல்கலைக்கழகங்கள், TVET மாணவர்களுக்கு முதுகலை மற்றும் முனைவர் (PhD) பட்டம் வரை உயர் கல்விக்கான வழிகளை வழங்குகின்றன.2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் TVET துறைக்கு அரசாங்கம் ரிம 7.9 பில்லியன் ஒதுக்கியுள்ளது என்றும், இது TVET 2.0 அமலாக்கத்தை வலுப்படுத்த இதுவரை வழங்கப்பட்ட மிக உயர்ந்த ஒதுக் கீடாகும் என்றும் அவர் கூறினார்.
"TVET - தொழிலுக்கான முதன்மைத் தேர்வு" என்ற கருப்பொருளைக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் தேசிய TVET தினக் கொண்டாட்டம், காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதில் விண்வெளி, டிஜிட்டல், விவசாயம், போக்குவரத்து, வாகனம், உற்பத்தி, சேவைகள்,மின்னணுவியல், ரயில்வே, கடல்சார் மற்றும் எரிசக்தி ஆகிய ஒன்பது முக்கியத் துறைகளைச் சேர்ந்த 107-க்கும் மேற்பட்ட முகமைகள், நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினர் பங்கேற்கின்றனர்








