சுபாங் ஜெயா, ஜூன் 6 -மருத்துவச் சுற்றுலாத் துறையில் ஆண்டுக்கு 15 விழுக்காடு வளர்ச்சியை எட்ட சிலாங்கூர் மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.வலுவான போக்கு வரத்துத் தொடர்புகள், தனியார் மருத்துவமனைகளின் விரிவான கட்டமைப்பு மற்றும் மலேசியாவின் சுகாதாரச் சேவைகள் மீதான அனைத்துலக அளவிலான நம்பிக்கையின் அதிகரிப்பு ஆகியவையே இந்த இலக்கை உந்துகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துலக நோயாளிகளின் வருகையில் பினாங்கு மற்றும் மலாக்காவை கிள்ளான் பள்ளத்தாக்கு முறியடித்துள்ளதை தரவுகள் காட்டுவதாக டூரிசம் சிலாங்கூர் (Tourism Selangor) தலைமைச் செயல் அதிகாரி சுவா யீ லிங் விளக்கினார்.
"சந்தையின் வளர்ச்சி சுமார் 15 விழுக்காடாக இருக்கும் என நாங்கள் எதிர் பார்க்கிறோம். இதைவிட அதிக வளர்ச்சியை நாங்கள் விரும்பினாலும், மிதமான வளர்ச்சி என்பது மக்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டுவதால் இதுவும் ஒரு நல்ல அறிகுறியே," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சிலாங்கூருக்கு வந்த 84.2 லட்சம் சுற்றுப் பயணிகளில் 3,36,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவச் சுற்றுலாவுக்காக வந்தவர்கள் என்றும், இதன்வழி ரிங்கிட் 150 கோடி முதல் ரிங்கிட் 200 கோடி வரை வருமானம் ஈட்டப் படும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் அவர் கூறினார்.
சிகிச்சைச் செலவுகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது கவனிப்பாளர்களுக்கான தங்குமிடச் செலவுகள் மற்றும் சில்லறைச் செலவுகள் ஆகியவற்றின் மூலம், சாதாரண சுற்றுப் பயணிகளின் சராசரி செலவீனத்தை விட மருத்துவச் சுற்றுப் பயணிகளின் செலவீனம் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம் என்று யீ லிங் சுட்டிக் காட்டினார்.
மலேசியச் சுகாதாரப் பராமரிப்புப் பயண மன்றத்தின் (MHTC) தரவுகளின்படி, சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவை உள்ளடக்கிய கிள்ளான் பள்ளத்தாக்கு, மருத்துவச் சுற்றுலாவின் முக்கிய மையமாக பினாங்கைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலக் கட்டத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கு சுமார் 5,60,700 அனைத்துலக நோயாளிகளைப் பெற்று, ரிங்கிட் 88.6 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.இந்தோனேசியா தொடர்ந்து சிலாங்கூரின் மிகப் பெரிய சந்தையாக இருந்தாலும், சீனா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற புதிய சந்தைகளை விரிவுபடுத்துவதில் டூரிசம் சிலாங்கூர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
கம்போடியச் சந்தையின் சாத்தியக் கூறுகளையும் டூரிசம் சிலாங்கூர் ஆராய்ந்து வருகிறது. அதே வேளையில், உலகளாவிய புவிசார் அரசியல் நிலையற்ற தன்மையின் காரணமாக மத்திய கிழக்கு சந்தையை விரிவுபடுத்தும் முயற்சிகள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வலுவான கட்டமைப்புசிலாங்கூரின் போட்டித்தன்மை அதன் வலுவான சுகாதாரக் கட்டமைப்பில், குறிப்பாகத் தனியார் மருத்துவ மையங்களின் குவிப்பு மற்றும் சிறந்த அனைத்துலகப் போக்குவரத்து வசதிகளில் தங்கியிருப்பதாக யீ லிங் தெரிவித்தார்.
"சிலாங்கூரில் அதிகபட்சமாக 46 தனியார் மருத்துவ மையங்கள் உள்ளன. மலேசியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நாம் மிகச் சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) மற்றும் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் ஆகியவை சிலாங்கூரை நாட்டின் முக்கிய நுழைவாயிலாக மாற்றியுள்ளன.மேலும், மொழி வசதி, கட்டுப்படியாகும் அளவிலான சிகிச்சைச் செலவு மற்றும் மலேசியச் சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கை ஆகியவை வெளிநாட்டு நோயாளிகளை, குறிப்பாக இந்தோனேசியர்களை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.
"நமது சுகாதாரப் பராமரிப்புச் செலவு நியாயமானதாகவும், போட்டித் தன்மை கொண்டதாகவும் உள்ளது. மலேசியாவில் வழங்கப்படும் மருத்துவத் திட்டங்களை அவர்கள் பார்க்கும்போது, அதன் விலை சிங்கப்பூரைப் போல அதிகப் பொருட்செலவாக இல்லாமல் இன்னும் கட்டுப்படியாகும் அளவிலேயே உள்ளது.
"இதனாலேயே இந்தச் சந்தையில் நமக்கு மிகப் பெரிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நான் நம்புகிறேன், ஏனென்றால் நமது சேவைகளின் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் உலகளாவியப் பயணச் செலவுகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் மத்தியில் டூரிசம் சிலாங்கூரின் மேம்பாட்டுப் பிரச்சாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த யீ லிங், பொழுதுபோக்குச் சுற்றுலாவை விட மருத்துவச் சுற்றுலா மிகவும் நிலைத்தன்மை கொண்டது என்றார்.
"மருத்துவ சிகிச்சையைப் பொறுத்தவரை, அதற்கான செலவு எவ்வளவு ஆயினும், தேவைப்படும் பட்சத்தில் மக்கள் அதைப் பெற்றுக் கொள்வார்கள். இது பொழுதுபோக்குச் சுற்றுலாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது; ஏனெனில் பொழுது போக்குச் செலவுகள் என்பது விருப்பத்தின் அடிப்படையிலானது, மேலும் செலவு மிக அதிகமாக இருந்தால் மக்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது," என்று அவர் விளக்கினார்.








