தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கக் 'கிளீன் அண்ட் கிரீன் 2026' திட்டம் - செந்தோசா தொகுதி

5 ஜூன் 2026, 8:55 AM
தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கக் 'கிளீன் அண்ட் கிரீன் 2026' திட்டம் - செந்தோசா  தொகுதி

ஷா ஆலம், ஜூன் 5: செந்தோசா மாநிலச் சட்டமன்றத் தொகுதியில் தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில், பொதுமக்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை மேம்படுத்துவதற்காக 'கிளீன் அண்ட் கிரீன் 2026' (Clean & Green 2026)எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்துப் பேசிய செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், தூய்மையை பேணுவதற்கும், இயற்கையைப் போற்றுவதற்கும், அண்டை வீட்டு உறவுகளுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், உள்ளூர் சமூகத்தின் ஒரு கூட்டு இயக்கத் தொடக்கமாக இத்திட்டம் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த 'கிளீன் அண்ட் கிரீன்' திட்டமானது, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு செயல்பாடுகளின் வழி, இன்றுவரை பலதரப்பட்ட மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.

சுற்றுப்புறத் தூய்மையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதால், இந்தத் திட்டத்தின் முழுமையான வெற்றிக்கு அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற இந்த 'கிளீன் அண்ட் கிரீன் 2026' திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவில் கலந்து சிறப்பித்த கிள்ளான் அரச மாநகராட்சி மன்ற (MBDK) மேயர் அப்துல் ஹாமித் ஹுசேன், இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்தச் சிறப்பு நிகழ்வில் கே.டி.இ.பி கழிவு மேலாண்மை நிறுவனம் (KDEBWM), கிள்ளான் அரச மாநகராட்சி மன்றப் பிரதிநிதிகள், என்.48 (N48) தொகுதி நகராண்மைக் கழக உறுப்பினர்கள், குடியிருப்பாளர் சங்கங்கள், ருகூன் தெத்தாங்கா (KRT) அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் தன்னார்வலர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

அதே வேளையில், இந்தத் தொடக்க விழாவை மிகவும் வெற்றிகரமாக நடத்த துணைபுரிந்த 'கிளீன் அண்ட் கிரீன்' திட்டக் குழுவினருக்கும், கலந்துகொண்ட அனைத்துத் தரப்பினருக்கும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தனது மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

நமது எதிர்காலத் தலைமுறையினர் பயன்பெறும் வகையில், இன்னும் கூடுதல் தூய்மையான, பசுமையான மற்றும் வளமான ஒரு செந்தோசா தொகுதியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.