அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க விவசாயிகளுக்கும் வேளாண் உணவுத் துறை சார்ந்தவர்களுக்கும் ரிம 2,700 உதவி

5 ஜூன் 2026, 8:29 AM
அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க விவசாயிகளுக்கும் வேளாண் உணவுத் துறை சார்ந்தவர்களுக்கும் ரிம 2,700 உதவி

ஷா ஆலம், ஜூன் 5: பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் அதிகரித்துள்ள செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க, விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பாளர்களுக்கு 'சிலாங்கூர் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தும் திட்டத்தின்' (Pakej Pengukuhan Daya Tahan Selangor) கீழ் வழங்கப்படும் ரொக்க உதவி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தகுதி பெறும் நபர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் ரிம 2,700 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இது அவர்களின் தினசரி செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவும், உணவு உற்பத்தி மற்றும் தொழிலைத் தடையின்றித் தொடரவும் உறுதுணையாக அமையும்.

இந்த உதவித்தொகை, விவசாய இடுபொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட தோட்டச் செயல்பாடுகளுக்கான செலவுகளைப் பெரிதும் ஈடுகட்ட உதவுவதாக சபாக் பெர்ணமில் கடந்த ஏழு ஆண்டுகளாக அன்னாசித் தோட்டம் நடத்தி வரும் 58 வயதுடைய ரோஸ்டின் நாபியா கூறினார். தற்போது அவர் பல்வேறு தரத்திலான சுமார் 80,000 அன்னாசிச் செடிகளைப் பயிரிட்டுள்ளார்.

"மாநில அரசாங்கத்தின் இந்த உதவியைப் பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டதில் இறைவனுக்கு நன்றி. இந்த உதவி ஆறு மாதங்களுக்கு மட்டுமே என்றாலும், தோட்டச் செயல்பாடுகள் சீராக நடப்பதை உறுதிசெய்ய இது ஒரு பெரிய உந்துதலாக உள்ளது. இத்துறையில் மூலதனம் ஒரு பெரிய சவாலாக இருக்கும் நிலையில், எனது தொழிலை மேலும் வலுப்படுத்த மாநில அரசு எனக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது," என்று ரோஸ்டின் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

பெஸ்தாரி ஜெயாவைச் சேர்ந்த நீர்வாழ் உயிரின வளர்ப்பாளரான 42 வயது முஹமட் ஹஃபிஸ் நோர்டின், இத்துறைக்கு அதிக அர்ப்பணிப்பு தேவைப் படுவதாகக் கூறினார். எனினும், இதில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், இது அதிக அளவிலான இளைஞர்களை ஈர்க்கும் திறன் கொண்டது என்றும் அவர் நம்புகிறார்.

"என்னை ஒரு பயனாளியாகத் தேர்ந்தெடுத்த மாநில அரசாங்கத்திற்கு நன்றி. இந்த ரிம 2,700 உதவித்தொகை செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க மிகவும் உதவியாக உள்ளது. பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபட்டால் இத்துறையில் பெரிய வெற்றி வாய்ப்புகள் உள்ளதால், இளைஞர்கள் இதில் ஈடுபட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்," என சுமார் 20 ஆண்டுகளாக இத்துறையில் உள்ள அவர் குறிப்பிட்டார்.

சுங்கை ஏர் தாவாரில் 4 ஏக்கர் பரப்பளவில் கஃபிர் எலுமிச்சை (limau purut) பயிரிட்டு வரும் 34 வயது நோர் அல்வானி அகமட் ஹாடிக்கு, அவரது மறைந்த தந்தையிடமிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் மரபுரிமையாகப் பெற்ற குடும்பத் தொழிலைத் தொடர இந்த உதவி ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

"நாட்டின் உணவு விநியோகச் சங்கிலியில் விவசாயத் துறை முக்கிய அங்கம் வகிப்பதால், எங்களைப் போன்ற தொழில் முனைவோருக்கு இதுபோன்ற திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இந்த உதவிக்காக மாநில அரசாங்கத்திற்கு எனது நன்றிகள்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, நேற்று சபாக் பெர்ணம், சுங்கை பெசாரில் உள்ள   ஸ்ரீ பெர்ணம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) டத்தோ ஐ ஆர்.
இஸாம் ஹஷிம்  , விவசாயிகளுக்கும் தொழில் முனைவோருக்கு இந்த உதவித் தொகையை வழங்கினார்.

சிலாங்கூர் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ரிம 131 மில்லியன் மதிப்பிலான இந்த முதல் முயற்சியின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட வேளாண் உணவுத் துறை சார்ந்தவர்கள் பல்வேறு வகைகளில் பயனடையவுள்ளனர்.

அதிகரிக்கும் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்கவும், உணவு உற்பத்தியைத் தடையின்றித் தொடரவும், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப் படுத்தவும் இந்த உதவி வழங்கப்படுவதாக டத்தோ  இஸாம் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.