தொழிலாளர்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் பெர்கேசொவின் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம்

5 ஜூன் 2026, 7:39 AM
தொழிலாளர்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் பெர்கேசொவின் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம்

கோலாலம்பூர், ஜூன் 5: விபத்துகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படும் போது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களின் வருமான ஆதாரத்தை இழக்காமல் இருப்பதை சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் (பெர்கேசொ - PERKESO) வேலை தொடர்பற்ற விபத்துத் திட்டம் அல்லது '24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம்' (Lindung 24 Jam) உறுதி செய்கிறது.

தற்போதுள்ள வேலை விபத்துத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறத் தகுதியற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பெர்கேசொவின் வியூகம் மற்றும் கார்ப்பரேட் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகி எட்மண்ட் சியோங் பெக் ஹுவாங் தெரிவித்தார்.

"2024-ஆம் ஆண்டில் பெர்கேசொவில் பதிவான 80,000-க்கும் மேற்பட்ட விபத்து வழக்குகளில், 1969-ஆம் ஆண்டு தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டத்தின் [சட்டம் 4] கீழ் வேலை விபத்து என்பதற்கான வரையறையைப் பூர்த்தி செய்யாததால் 20,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிராகரிக்கப்பட்டன.

விபத்து நேரிடும் போது சமூக பாதுகாப்பு வளையத்தில் இருந்து விடுபடும் தொழிலாளர்களின் ஒரு தரப்பினர் இருப்பதை இது காட்டுகிறது" என்று நேற்று இரவு பெர்னாமா டிவியின் 'ருவாங் பிசாரா' (Ruang Bicara) நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம், விளையாட்டு, ஓட்டப்பயிற்சி (jogging), உல்லாசப் பயணம் அல்லது குடும்பத்துடன் வெளியில் செல்லுதல் போன்ற அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது விபத்துக்குள்ளாகும் தொழிலாளர்களும் பாதுகாப்புப் பெறத் தகுதி பெறுவர் என்று சியோங் கூறினார்.

உதாரணமாக, 1,700 ரிங்கிட் மாத வருமானம் கொண்ட ஒரு இளம் தொழிலாளி இத்தகைய விபத்தில் உயிரிழக்க நேரிட்டால், அவரின் குடும்பத்தாரும் குழந்தைகளும் அவர்களின் தகுதிக் காலத்தின் அடிப்படையில் பல இலட்சம் ரிங்கிட் வரையிலான சார்ந்திருப்போர் பலன்களைப் (Faedah Orang Tanggungan) பெற முடியும் என்று அவர் உதாரணம் காட்டினார்.

'லின்டுங் 24 ஜாம்' திட்டம் என்பது 1971-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பெர்கேசொவின் வேலை விபத்துத் திட்டத்தின் பரிணாம வளர்ச்சியாகும். அப்போது வேலை செய்யும் இடத்தில் அல்லது முதலாளி வழங்கும் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது ஏற்படும் விபத்துகளுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

வீடுகளுக்கும் வேலை இடங்களுக்கும் இடையே பயணம் செய்யும்போது ஏற்படும் விபத்துகளைப் பாதுகாக்கும் வகையில், 1990-களின் முற்பகுதியில் பிரிவு 24-இன் கீழ் அச்சட்டம் மேம்படுத்தப்பட்டது என்றார் அவர்.

"இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வேலைச் சூழல் கணிசமாக மாறியுள்ளது. நெகிழ்வான வேலை நேர முறைகள் மற்றும் வீடுகளுக்கும் வேலை இடங்களுக்கும் இடையே தெளிவான எல்லைகள் இன்றி வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

"இப்போது, விபத்துகள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். பல தொழிலாளர்கள் நெகிழ்வாகவும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறியபடியும் வேலை செய்கிறார்கள், எனவே தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பெர்கேசொ இந்த 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்முயற்சியை எடுத்துள்ளது," என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், கூடுதல் சந்தாத் தொகை குறித்து கருத்துரைத்த சியோங், குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் இத்திட்டத்திற்கான சந்தாவைச் செலுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக இது கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்றார்.

முதல் இரண்டு ஆண்டுகளுக்குச் சந்தா விகிதம் 0.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மூன்றாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை ஒரு சதவீதமாகவும், ஆறாவது ஆண்டு முதல் 1.25 சதவீதமாகவும் அதிகரிக்கப்படும்.

உதாரணமாக, மாதத்திற்கு சுமார் RM1,700 சம்பளம் பெறும் ஒரு தொழிலாளி தோராயமாக RM11-ஐச் சந்தாவாகச் செலுத்துவார் என்றும் அவர் விளக்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.