RM16.93 மில்லியன் மதிப்பிலான புதிய சபாக் பெர்ணம் மாவட்ட கல்வி அலுவலகத்தை சிலாங்கூர் ராஜா மூடா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்

5 ஜூன் 2026, 7:18 AM
RM16.93 மில்லியன் மதிப்பிலான புதிய சபாக் பெர்ணம் மாவட்ட கல்வி அலுவலகத்தை சிலாங்கூர் ராஜா மூடா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்

சபாக் பெர்ணம், ஜூன் 5 - டூலி யாங் தெராமாட் மூலியா (DYTM) சிலாங்கூர் ராஜா மூடா, தெங்கு அமீர் ஷா, இன்று இங்கு நடைபெற்ற 'ககாசான் ரும்புன் சிலாங்கூர்' திட்டத்தின் வாயிலாக சபாக் பெர்ணம் மாவட்ட கல்வி அலுவலகத்தை (PPD) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்தப் புதிய கட்டிடம் RM16.93 மில்லியன் செலவில் கட்டப் பட்டுள்ளதாகவும், 2021 ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி கடந்த மார்ச் 19 ஆம் தேதி முழுமையாக முடிவடைய 183 வாரங்கள் ஆனதாகவும் சிலாங்கூர் பொதுப் பணித் துறை (JKR) இயக்குநர் இர். சுக்ரி இஷாக் தெரிவித்தார்.

"இத்திட்டம் 'தொழில்துறை வடிவமைப்பு' (Industrial Design) என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி, மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் உள்ள ஒரு கட்டிடத்திற்கு தனித்துவமான, புதிய மற்றும் நவீன அடையாளத்தை வழங்குவதன் மூலம் ஒரு துணிச்சலான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

"உண்மையில், வழக்கமான உட்புற வடிவமைப்பிற்கு இக்கருப்பொருளைப் பயன்படுத்திய மலேசியாவின் முதல் PPD கட்டிடம் இதுவாகும்," என்று அவர் DYTM தெங்கு அமீர் ஷா முன்னிலையில் நடைபெற்ற சபாக் பெர்ணம் PPD திறப்பு விழாவில் விளக்கமளிக்கும் போது கூறினார்.

இந்த மூன்று மாடிக் கட்டிடத்தில் நிர்வாகப் பகுதி, கூட்ட அறைகள், தகவல் சேமிப்பு அறை, இயக்குநர் அலுவலகம், பிரதான அலுவலகம் மற்றும் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான வசதிகள் என 90 அறைகள் மற்றும் இடங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

“மேலும், வாடிக்கையாளர்களின் வசதியும் ஊழியர்களின் பாதுகாப்பும் JKR-க்கு எப்போதுமே முன்னுரிமையாகும். அதற்கேற்ப, உயர் தரத்திலான அவசரக் காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இக்கட்டிடத்தில் மூன்று சேவை கவுண்டர்களும் 11 அவசரகால வெளியேறும் கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

“இந்த புதிய கட்டிடம் ஒட்டுமொத்த சிலாங்கூரிலும், குறிப்பாக சபாக் பெர்ணத்திலும் கல்விச் சேவை வழங்குதலின் தரத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என செயல் படுத்துநரான JKR சிலாங்கூர் பெரிதும் நம்புகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சபாக் பெர்ணம் மாவட்ட கல்வி அதிகாரி மர்ஹானி எம் ஹனிஃப் தமது தொடக்க உரையில், 1982-ஆம் ஆண்டு சுங்கை பெசாரில் உள்ள ஸ்ரீ மக்மூர் தேசியப் பள்ளியில் தொடங்கப்பட்ட சபாக் பெர்ணம் PPD-யின் வரலாற்றை நினைவுகூர்ந்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வசதியையும் சீரான செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக PPD சபாக் பெர்ணம் மிகவும் பொருத்தமான இடத்திற்கு மாற்றப்பட்டது என்று அவர் கூறினார்.

பின்னர், 2013-ல் இந்த அலுவலகம் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப் பட்டு, முந்தைய இடத்தை விட மிகவும் சீரான தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.

“இருப்பினும், பல வருட பயன்பாட்டிற்குப் பிறகு அந்தக் கட்டிடம் பழுதடையத் தொடங்கியது. எனவே ஒரு நிரந்தரக் கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த முயற்சிக்கு பலன் கிடைத்து 2016-ல் நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, சபாக் பெர்ணம் JKR-ஆல் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.

“இப்புதிய கட்டிடம் மே 18, 2026 அன்று கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப் பட்டுச் செயல்படத் தொடங்கியது. தற்போது, சபாக் பெர்ணம் PPD-யில் 43 அதிகாரிகள் மற்றும் 28 ஆதரவுப் பணியாளர்கள் என மொத்தம் 71 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து நவீன வசதிகளும் கொண்ட இக்கட்டிடம், 20,534 மாணவர்களின் தொடர்ச்சியான கல்விச் சிறப்பை உறுதி செய்யும் நோக்கில், இம் மாவட்டத்தில் உள்ள 46 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 18 இடைநிலைப் பள்ளிகள் என மொத்தம் 64 பள்ளிகளின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் முக்கிய மையமாகச் செயல்படும்.

இந்த நவீன வசதி, மாவட்டத்தின் கல்வித் தரத்தைத் தக்கவைக்கவும் அதனை மேலும் மேம்படுத்தவும் பள்ளிகளில் பணியாற்றும் 2,242 ஆசிரியர்கள் மற்றும் 398 ஆதரவுப் பணியாளர்களின் பங்கை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.