ஷா ஆலம், ஜூன் 4: நேற்று முன்தினம் இரவு தஞ்சோங் காராங் பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு எதிரே உள்ள ஆறு கடைகள் தீக்கிரையாகின. இதில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களைச் சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் தலா 2,000 ரிங்கிட் நிதியுதவியையும் அவர் வழங்கினார்.
சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஆறு கடைகள் இந்தத் தீ விபத்தில் சிக்கியதாகவும், ஏறக்குறைய 90 சதவீதப் பொருட்கள் மற்றும் சொத்துகள் முற்றிலும் நாசமாகிவிட்டதாகவும் சுய் லிம் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்ட கடைகளில் நகைக்கடை, மருந்தகம் மற்றும் மின்னணு பொருட்கள் விற்கும் கடை ஆகியவை அடங்கும்," என அவர் தனது முகநூல் காணொளிப் பதிவில் குறிப்பிட்டார்.
இரவு சுமார் 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து, அதிகாலை 4 மணிக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர் காலை 8 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டதாக அவர் கூறினார். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.
"தஞ்சோங் காராங் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் இணைந்து நான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன்."
"தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர், சிகிஞ்சான் தொண்டூழியத் தீயணைப்புப் படையினர் மற்றும் உதவியப் பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார் அவர்.
இதற்கிடையே, சபாக் பெர்ணம் மற்றும் சிகிஞ்சான் பகுதிகளில் தீயணைப்பு உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் குறைந்த நீர் அழுத்தம் போன்ற சில சவால்கள் தீயணைப்பு நடவடிக்கையின் போது எதிர்கொள்ளப்பட்டதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகச் சுய் லிம் கூறினார்.
இதன் காரணமாக, தீயணைப்புப் படையினர் தண்ணீர் தாங்கி லாரிகளின் உதவியைக் கொண்டு தீயை அணைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, நவீன மற்றும் மேம்பட்ட தீயணைப்பு உபகரணங்களைப் பெறுவதற்குக் கூடுதல் மானியம் கோரி, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு (KPKT) கடிதம் ஒன்றினைச் சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
"நவீன வசதிகள் கிடைக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்கள் நேரும்போது இன்னும் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்," என அவர் மேலும் கூறினார்.
தஞ்சோங் காராங் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது
4 ஜூன் 2026, 7:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தஞ்சோங் காராங்கில் தீ விபத்து: ஆறு வணிக வளாகங்கள் முற்றிலும் சேதமடைந்தன
Shalini Rajamogun
3 ஜூன் 2026

video
Suee Lim santuni mangsa kebakaran di Tanjung Karang, serah bantuan RM2,000
Kathiravan Manoharan
5 ஜூன் 2026

---
Lagi Petani Tanjong Karang Berdemo Bantah Subsidi Benih Padi Tidak Berkualiti
admin
29 அக்டோபர் 2012

---
Loji Pembersihan Air Sungai Sireh Kini Beroperasi 100 Peratus
admin
19 அக்டோபர் 2012

உங்கள் கருத்து என்ன?




