ஷா ஆலாம், ஜூன் 3: மலேசியத் தீபகற்பத்தின் பல மாநிலங்கள், சபா மற்றும் சரவாக் ஆகியப் பகுதிகளில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யகூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, தீபகற்ப மலேசியாவில் பெர்லிஸ் மாநிலம் முழுவதும் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும்.
அதே வேளையில், கெடாவின் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா, பாடாங் தெராப், யான், பெண்டாங் மற்றும் சிக் ஆகிய இடங்களிலும், திரங்கானுவின் செதியூ மற்றும் கோலா நெருஸ் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சிலாங்கூரின் கோம்பாக் மற்றும் உலு லங்காட்; நெகிரி செம்பிலானின் ஜெலுபு மற்றும் ஜெம்போல்; மற்றும் ஜோகூர் மாநிலத்தின் மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய இடங்களிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சரவாக்கைப் பொறுத்தவரை, சிபுவில் உள்ள சிலாங்காவ்; முக்காவில் உள்ள மாத்து, தாலாட், முக்கா மற்றும் காபிட்டில் உள்ள சோங் ஆகிய இடங்கள் இந்த கனமழையால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், சபாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ரானாவ்; மற்றும் சண்டாக்கான் பிரிவில் உள்ள தொங்கோட், தெலுபிட், கினபாத்தாங்கான் மற்றும் சண்டாக்கான் ஆகிய இடங்களிலும் இன்று மாலை வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான தீவிர மழைப்பொழிவு பதிவாகும் போதும் அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதும் மட்டுமே இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
மேலும், இந்த எச்சரிக்கையானது ஒரு குறுகிய கால அறிவிப்பு என்றும், இது வெளியிடப்பட்டதில் இருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.






