கோலா லங்காட்டில் அதிகரிக்கும் டிங்கி அச்சுறுத்தல்: ஏடிஸ் ஒழிப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒன்றிணைய பாப்பாராய்டு அழைப்பு

3 ஜூன் 2026, 7:06 AM
கோலா லங்காட்டில் அதிகரிக்கும் டிங்கி அச்சுறுத்தல்: ஏடிஸ் ஒழிப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒன்றிணைய பாப்பாராய்டு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 3: கோலா லங்காட் மாவட்டத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பந்திங் சட்டமன்ற உறுப்பினர் பாப்பாராய்டு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே 31-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ஒரு மரணம் உட்பட மொத்தம் 527 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால், பொதுமக்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10 நிமிடங்களையாவது ஒதுக்கி, தங்களின் குடியிருப்புப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைச் சோதித்து அவற்றை ஒழிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்துத் தமது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள், இந்தியச் சமூகத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் சமுதாயத் தலைவர்கள் அனைவரும் தத்தம் பகுதி மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாகக் கூட்டுப்பணி (Gotong-royong) நடவடிக்கைகளை நடத்த வேண்டும் எனச் சாடினார். இதன் மூலம் குடியிருப்புப் பகுதிகள் எப்போதும் தூய்மையாகவும், கொசுக்கள் இல்லாத இடமாகவும் மாறுவதை உறுதி செய்ய முடியும் என்று அவர் விவரித்தார்.

கோலா லங்காட் மாவட்டச் சுகாதார அலுவலகம் (PKD) வெளியிட்டுள்ள அண்மைக்கால ஒட்டுமொத்த டிங்கி புள்ளிவிவரத் தரவுகளையும் பாப்பாராய்டு தமது பதிவில் பகிர்ந்துள்ளார்.

அந்தத் தரவுகளின்படி, கோலா லங்காட் மாவட்டத்தில் இன்னும் ஐந்து இடங்களில் டிங்கி பரவல் தீவிரமாக உள்ளது. அவற்றில் நான்கு இடங்கள் தற்பொழுது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, தாமான் லங்காட் ஜெயா, பண்டார் சௌஜானா புத்ரா 21 பிளாக் ஏ மற்றும் பி, கம்போங் ஜெஞ்சாரோம் பள்ளிச் சாலை ஆகிய இடங்களில் தலா இரண்டு சம்பவங்களும், தாமான் பெரின்டஸ்ட்ரியான் பூச்சோங்கில் மூன்று சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இருப்பினும், பண்டார் ஸ்ரீ ஏஹ்சான் பகுதியில் உள்ள ஜாலான் 4/25, 4/28, 4/31, 4/33 மற்றும் 4/34 ஆகிய இடங்கள் ஆறு டிங்கி சம்பவங்களுடன் இன்னும் கட்டுப்பாடற்ற அபாயகரமான பகுதியாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

டிங்கி பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் மிக அவசியமாகும், குறிப்பாக வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றி தூய்மையைப் பேண வேண்டும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

மேலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே டிங்கியை முற்றாகத் தடுக்க முடியும் என்றும், சுற்றுப்புறத் தூய்மை என்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் நினைவூட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.