ஷா ஆலம், ஜூன் 2: ஷா ஆலமில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், ஜாலான் சுபாங்கில் உள்ள மான்போர்ட் சந்திப்பு (Persimpangan Monfort), கெர்ஜாயா-பெர்சியாரான் சுக்கான் சந்திப்பு (Persimpangan Kerjaya-Persiaran Sukan) மற்றும் சென்ட்ரல் சுகர்ஸ் ரிஃபைனரி (CSR) தொழிற்சாலைக்கு முன்புறம் ஆகிய பகுதிகளில் மூன்று புதிய மேம்பாலங்கள் கட்டப் படவுள்ளன.
இத்திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது டெண்டர் ஆவணங்களைத் தயாரிக்கும் கட்டத்தை எட்டியுள்ளதாக ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப் தெரிவித்தார்.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் (Kamar Khas) இப்பிரச்சினையை நான் எழுப்பினேன். அப்போது, மான்போர்ட் சந்திப்பு, பிரன்ஸ்பீல்ட்டை நோக்கிச் செல்லும் கெர்ஜாயா - பெர்சியாரான் சுக்கான் சந்திப்பு மற்றும் CSR-க்கு முன் புறம் உள்ள சந்திப்பு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் பதிலளித்திருந்தார்."
"அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு, இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் இதுகுறித்த அடுத்தக்கட்ட நிலவரம் தொடர்பில் நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். இம்முறை பொதுப்பணித்துறை அமைச்சரே நேரடியாகப் பதிலளித்தார். அதாவது, இத்திட்டம் தற்போது அமலாக்கச் செயல்முறையில் உள்ளது."
"கடந்த வாரம் சிலாங்கூர் மாநில பொதுப்பணித் துறையிடம் (JKR) இருந்து இதன் தற்போதைய நிலவரம் குறித்த விளக்கத்தைப் பெற்றேன். இம்முறை கட்டுமானத் திட்டம் மற்றும் வடிவமைப்பு ஆகியவை முழுமையாகத் தயாராகி விட்டதைக் காட்டினர். டெண்டர் ஆவணங்களைத் தயாரிக்க ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளார்," என அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
எந்தவித தாமதமின்றி மேம்பால கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு ஏதுவாக, டெண்டர் ஆவணங்களைத் தயாரிக்கும் பணி விரைவில் முடிவடையும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒன்றோடொன்று நெருக்கமாக அமைந்துள்ள பல போக்குவரத்து விளக்குகளால் தற்போது கடுமையான நெரிசலை எதிர்கொள்ளும் பகுதிகளில், இந்த மேம்பாலங்கள் போக்குவரத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும் என அஸ்லி கூறினார்.
"இந்த மேம்பாலங்கள் கட்டப்படுவதன் மூலம் நெரிசல் வெகுவாகக் குறையும். ஏனெனில், தற்போது மூன்று போக்குவரத்து விளக்குகள் அருகருகே இருப்பதால் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. கீழே போக்குவரத்து விளக்குகள் இல்லாதபோது, கூட்டரசு நெடுஞ்சாலை (Lebuhraya Persekutuan) மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்து சீராகும்," என்றார் அவர்.
"கூட்டரசு நெடுஞ்சாலை மேம் பாலப் பகுதியும் மறுவடிவமைப்பு செய்யப்படும். அங்குள்ள போக்குவரத்து விளக்குகள் நான்கு கட்ட அமைப்பிலிருந்து (empat fasa) மூன்று கட்ட அமைப்பாகத் தரம் உயர்த்தப்படும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஷா ஆலமில் 3 புதிய மேம்பாலங்கள்
2 ஜூன் 2026, 9:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




