பி ஜே (PJ) அரசு மருத்துவமனை கட்டுமானம்: வாகன நிறுத்துமிடம், செயல்பாட்டுத் திறனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

2 ஜூன் 2026, 7:53 AM
பி ஜே (PJ) அரசு மருத்துவமனை கட்டுமானம்: வாகன நிறுத்துமிடம், செயல்பாட்டுத் திறனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 2: பெட்டாலிங் ஜெயாவில் அரசு மருத்துவமனை கட்டும் முன்மொழிவை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

இருப்பினும், தற்போதுள்ள சுகாதார மையங்களில் நிலவும் வாகன நிறுத்துமிடம் (பார்க்கிங்), போக்குவரத்து வசதி மற்றும் செயல்பாட்டுத் திறன் போன்ற குறைபாடுகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த புதிய அரசு மருத்துவமனை, மற்றப் பகுதிகளுக்குச் சென்று சிகிச்சை பெறும் மக்களின் மருத்துவ வசதியை எளிதாக்கும் என்று 25 வயதான குழாய் பொறியாளர் (pipeline engineer) ஆடம் ஹாரித் சைனல் அபிடின் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சியும் மக்கள் தொகை பெருக்கமும் இங்கு ஒரு அரசு மருத்துவமனையின் அவசியத்தை உணர்த்துகின்றன என்றார் அவர்.

"அவசர சிகிச்சையோ அல்லது சாதாரண சிகிச்சையோ, மக்கள் அருகிலேயே மருத்துவ உதவியைப் பெற இது ஒரு சிறந்த திட்டமாகும்," என அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

இருப்பினும், தற்போதுள்ள மருத்துவமனைகளில் மக்கள் சந்திக்கும் பார்க்கிங் பற்றாக்குறை மற்றும் நோயாளிகளை நிர்வகிப்பதில் ஏற்படும் தாமதம் போன்ற பிரச்சினைகளில் இத்திட்டத்தின் வடிவமைப்பாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆடம் வலியுறுத்தினார்.

அவசரப் பிரிவு சேவைகள் மிகவும் திறம்படச் செயல்படத் திட்டமிடப்பட வேண்டும். மேலும், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல போதுமான வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயாவில் நிலப்பற்றாக்குறை மற்றும் நெருக்கடியான கட்டமைப்பு இருப்பதால், செங்குத்து (vertical) வடிவிலான மருத்துவமனை கட்டும் யோசனையையும் அவர் ஆதரித்தார்.

"செங்குத்து மருத்துவமனை கட்டப் பட்டால், அதற்கான வடிவமைப்புக் குழுவினர் இருக்கும் நிலத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும், அதோடு பார்க்கிங் மற்றும் தடையற்ற போக்குவரத்து வசதியையும் உறுதி செய்ய வேண்டும்," என்றார் அவர்.

கடந்த மே 27ஆம் தேதி, தற்போது X Park PJ South விளையாட்டு வளாகம் அமைந்துள்ள தாமான் மேடானில் உள்ள 6 ஹெக்டேர் நிலப்பரப்பு, பெட்டாலிங் ஜெயா மருத்துவமனை கட்டுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹமட் அறிவித்திருந்தார்.

அதே நாளில், 500 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை செங்குத்து அமைப்பில் கட்டப்படும் எனவும், இது உள்ளூர் மக்களின் போக்குவரத்து வசதி, திறன், நிலத்தின் விலை மற்றும் சமூகத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கும் தன்மை ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் எனவும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருந்தார்.

மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்

இதற்கிடையே, மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், பெட்டாலிங் ஜெயா மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் மக்கள் தொகை பெருகி வரும் சூழ்நிலையிலும், இந்த மருத்துவமனை கட்டும் திட்டம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (MIDA) இயக்குநர் டெரிக் தங்கப்பன் (வயது 41) தெரிவித்தார்.

"பெட்டாலிங் ஜெயா வில் அரசு மருத்துவமனையைக் கட்ட இதுவே சரியான தருணம். மருத்துவச் செலவுகளும் மக்கள் தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்களுக்குச் சிறந்த மருத்துவ வசதிகள் தேவைப்படுகிறது."

வழக்கமான மருத்துவ பரிசோதனை அல்லது சிகிச்சைக்காக மக்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்க கூடாது," என்றார் அவர்.

அன்றாட மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பொதுவான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் இந்த மருத்துவமனை முழுமையான பொது மருத்துவச் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.

பார்க்கிங் பற்றாக்குறையால் தவிக்கும் மற்ற மருத்துவமனைகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கான மக்கள் தொகைப் பெருக்கத்தின் அடிப்படையில் அதிகாரிகள் இத்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று டெரிக் குறிப்பிட்டார்.

"நோயாளிகள், குடும்பத்தினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என அனைவருக்கும் பார்க்கிங் இடம் அவசியம். எதிர்காலத்தில் பார்க்கிங் சிக்கல் எழாமல் இருக்க, ஆரம்பத்திலேயே போதுமான இடவசதியை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்," என்ற அவர் செங்குத்து மருத்துவமனை அமைப்பிற்கும் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

28 வயதான புத்தகக் கடைப் பணியாளர் இசாட்டி நடாஷாவும் இதே கருத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த புதிய மருத்துவமனை, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் (OKU) மற்றும் தொடர் சிகிச்சை தேவைப் படுவோருக்குப் பெரிதும் பயனளிக்கும் என அவர் கூறினார்.

குடியிருப்புகளுக்கு அருகிலேயே மருத்துவ வசதி இருப்பது பல குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் என்றார் அவர்.ஆயினும், தற்போதுள்ள சுகாதார மையங்களில் நெரிசல் சாதாரணமாகி விட்டதால், போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள் குறித்து அவரும் கவலை தெரிவித்தார்.

"இந்த மருத்துவமனை கட்டப் பட்டால், பார்க்கிங் வசதிகள் கண்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும். இப்போது கூட, இப்பகுதியில் உள்ள கிளினிக்குகள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு அருகே வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பது கடினமாக உள்ளது; குறிப்பாக சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் நடமாடச் சிரமப்படும் நோயாளிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்," என்றார் அவர்.

சுகாதாரக் கிளினிக்குகள் அதிகரிக்க வேண்டும்

இதற்கிடையில், பலரும் இன்னும் வரையறுக்கப்பட்ட ஆரம்பச் சுகாதாரச் சேவைகளையே நம்பியிருப்பதால், அப்பகுதியில் கூடுதல் சுகாதாரக் கிளினிக்குகளை (Klinik Kesihatan) அமைப்பதையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என 53 வயதான நிர்வாகி ரஹிமா சைத்தான் கருதுகிறார்.

பெட்டாலிங் ஜெயா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில், 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மக்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யுமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

முறையான திட்டமிடல் இல்லையென்றால் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், வாகன நிறுத்துமிடம் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் தனி கவனம் செலுத்தப்பட வேண்டும் என ரஹிமா கூறினார்.

"பார்க்கிங் வசதி மிகவும் முக்கியமானது. பீக் நேரங்களில் (peak hours) இப்பகுதி ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. முறையான திட்டமிடல் இல்லாமல் புதிய மருத்துவமனையைக் கட்டினால் நெரிசல் மேலும் அதிகரிக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

நீண்டகாலத் தேவைகளைத் தீர்மானிப்பதில் சுகாதாரத் திட்டமிடுபவர்கள் அதிக அறிவுடையவர்கள் என்பதை ஒப்புக் கொண்டாலும், தற்போதைக்கு சுகாதாரக் கிளினிக்குகளை அதிகரிப்பது உள்ளூர் சமூகத்திற்குப் பெரும் நன்மையை அளிக்கும் என்று ரஹிமா தன் கருத்தை முன்வைத்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.