அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக  ஓட்டிச் செல்லப்பட்ட இரு சொகுசுக் கார்களால் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

2 ஜூன் 2026, 2:28 AM
அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக  ஓட்டிச் செல்லப்பட்ட இரு சொகுசுக் கார்களால் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

ஷா ஆலம், ஜூன் 2: நேற்று மதியம் ஜாலான் ரெங்கம்-குளுவாங் சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழக்கக் காரணமான விபத்தானது, இரண்டு சொகுசுக் கார்களை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டியதால் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

22 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற பிஎம்டபிள்யூ (BMW) 530e கார், குளுவாங் நகரிலிருந்து சிம்பாங் ரெங்காம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக குளுவாங் மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் பஹ்ரின் முஹமட் நோ தெரிவித்தார்.

அந்தக் காரும், 19 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) A250 காரும் அதிவேகமாகவும் மிகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

"ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட அவ் விபத்து குறித்து மதியம் 1.15 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணையில், பிஎம்டபிள்யூ 530e கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் நுழைந்து நான்கு வாகனங்கள் மீது மோதியது தெரியவந்தது.

"பெரோடுவா அல்சா, டொயோட்டா வயோஸ், புரோட்டான் வீரா மற்றும் எதிர் திசையில் வந்த மற்றொரு மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவை மீது அக்கார் மோதியது. பின்னர், அந்த வாகனம் சறுக்கிச் சென்று சாலையின் மறுபுறம் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது," என்றார் அவர்.

"இந்த கோர மோதலில், டொயோட்டா வயோஸ் காரை ஓட்டிய 36 வயது ஆடவரும், அவரது 33 வயது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 73 வயது மூதாட்டியும் 10 வயது சிறுமியும் பலியாகினர். தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்," என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

பிஎம்டபிள்யூ 530e காரின் ஓட்டுநரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக பஹ்ரின் மேலும் கூறினார்.

பெரோடுவா அல்சா காரில் பயணம் செய்த 11 வயது சிறுவனும் 7 வயது சிறுமியும் தலையில் காயமடைந்து குளுவாங், எஞ்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அல்சாவை ஓட்டிய 43 வயது ஓட்டுநருக்குக் காலிலும், புரோட்டான் வீராவை ஓட்டிய 22 வயது ஆடவருக்கு வாயிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்றொரு மெர்சிடிஸ் காரை ஓட்டிய 57 வயது பெண்ணுக்குச் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

"காயமடைந்த அனைவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மெர்சிடிஸ் பென்ஸ் A250 காரின் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளதோடு, விசாரணைக்காக அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

"சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் ஏதுமில்லை எனத் தெரியவந்தது. ஜாக்கிரதையாகவும் மற்ற சாலைப் பயனர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் வாகனத்தை ஓட்டியதற்காக, அதே சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் அவரைத் தடுத்து வைக்க இன்று நீதிமன்றத்தில் உத்தரவு கோரப்படும்," என்றார் பஹ்ரின்.

இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது 07-7784222, 07-7766822 (அவசர உதவி எண்), 07-7784256 மற்றும் 014-365682 ஆகிய தொலைபேசி எண்களில் குளுவாங் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தையோ (IPD) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.