போதைப்பொருள் கொள்கை சீர்திருத்தம்: தண்டனைக்கு பதிலாக சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

2 ஜூன் 2026, 1:37 AM
போதைப்பொருள் கொள்கை சீர்திருத்தம்: தண்டனைக்கு பதிலாக சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜூன் 1: போதைப்பொருள் கொள்கை சீர்திருத்தங்கள், சிறைத்தண்டனை விதிப்பதற்குப் பதிலாக சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மலேசியப் போதைப்பொருள் கொள்கை திட்டத்தின் (DPPM) மூத்த தொழில்நுட்ப அதிகாரி தெரிவித்தார்.

போதைப்பொருள் அடிமைத்தனம் தொடர்பான சிக்கல்களை மிகவும் திறம்பட கையாளுவதற்கு, சட்டச் சீர்திருத்தங்கள் ரஹ்மா (Rahmah) மற்றும் மகாசிட் ஷாரியா (Maqasid Syariah) ஆகிய நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று ஃபரிட் சுஹ்ரி இஸ்மாயில் கூறினார்.பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தற்போதைய சட்டங்கள், போதைப்பொருள் அடிமைத்தனம் மற்றும் துஷ்பிரயோகப் பிரச்சினைகளைக் கணிசமாகக் குறைக்கத் தவறி விட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

"மிக முக்கியமாக, இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், தண்டனையை விட மறுவாழ்வு மற்றும் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை மகாசிட் ஷாரியாவின் உணர்வோடு இந்தச் செயற் குறிப்பு (working paper) முன்வைக்கிறது.

""முதலில் அவர்களுக்கு உதவி வழங்கப் படாமலும், இரண்டாவது வாய்ப்பு அளிக்கப் படாமலும் அவர்கள் தண்டிக்கப் படுவதை நாங்கள் விரும்பவில்லை. மனந்திரும்ப கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.

சீர்திருத்தத்தின் கீழ், இஸ்லாஹ் (islah) உணர்வு எப்போதும் உள்ளது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.நேற்று புக்கிட் ஜாலிலில் உள்ள கிங்ஸ்டன் 10 தங்கும் விடுதியில் நடைபெற்ற ‘ரஹ்மா மற்றும் மகாசிட் ஷாரியா அடிப் படையிலான போதைப்பொருள் கொள்கையை நோக்கி’ என்ற செயற்குறிப்பின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் அடிமைத்தனத்தின் உண்மையான நிலையைத் தற்போதையச் சட்டம் கருத்தில் கொள்ளாததால், அது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ஃபரிட் கூறினார்.தற்போதைய சட்டங்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுடன் மற்ற பயனர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; இதன் விளைவாக அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுகிறார்கள்.

"சர்வதேச ஆய்வுகளின்படி, பெரிய அளவிலான போதைப்பொருள் பயன்பாட்டு விகிதத்தில், 10 முதல் 20 சதவீதம் பேர் மட்டுமே உண்மையாக அடிமையாகியுள்ளனர். சிலர் சோதனைக்காக, பொழுது போக்கிற்காகவோ அல்லது வேலை காரணமாக மாதத்திற்கு ஒரு முறையோ பயன் படுத்துகின்றனர்.""ஆனால் தற்போதையச் சட்டங்கள் இந்த வேறுபாடுகளை பார்ப்பதில்லை. அனைவரும் அடிமைகளாகவும் குற்றவாளிகளாகவும் கருதப்பட்டு சிறையிலோ அல்லது தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையின் (AADK) கீழ் உள்ள PUSPEN மறுவாழ்வு மையங்களிலோ அடைக்கப் படுகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

இக்கருத்தை ஆமோதித்த இக்ராம் (IKRAM) மலேசியாவின் பிரதிநிதி ஃபரிடா மாலுடின், இந்தச் செயற்குறிப்பு போதைப்பொருள் கடத்துபவர்களை அல்லாமல், அதைப் பயன்படுத்துபவர்களையும் அடிமையானவர்களையும் மையமாகக் கொண்டுள்ளது என்றும், சிகிச்சை அடிப்படையிலான அணுகுமுறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறினார்."சிறைத் தண்டனை விதிக்கும் அணுகுமுறைக்கு பதிலாக சிகிச்சையை நோக்கிய அணுகுமுறையை நோக்கி நாங்கள் செல்கிறோம்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் நோயாளிகளாகக் கருதப்படுவதால், இது சுகாதார அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும்," என்று அவர் விளக்கினார். போதைப்பொருள் கொள்கை சீர்திருத்தம் என்பது போதைப்பொருள் பயன் பாட்டைச் சட்டபூர்வமாக்கும் அல்லது இயல்பாக்கும் முயற்சி என்ற இஸ்லாமியச் சமூகத்தின் தவறான புரிதலைத் தவிர்க்க இந்த அணுகுமுறை முக்கியமானது என்று ஃபரிடா சுட்டிக் காட்டினார்.

"போதைப் பொருள் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப் படுவதைத் தவிர்க்க, தற்போதைய அணுகுமுறையை வலுப்படுத்த இந்தச் செயற்குறிப்பை உருவாக்க விரும்புகிறோம். அவர்கள் குற்றவாளிகள் அல்ல, அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அதைப் பயன்படுத்திய போதை பித்தர்களாகும் என்றார்.

""சிறைச்சாலைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர், அவர்களில் 60 சதவீதம் பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக அங்கு உள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.இக்ராம் அமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்தச் செயற்குறிப்பு, பிரதமர் துறையின் (மத விவகாரங்கள்) முன்னாள் அமைச்சர் டத்தோ டாக்டர் சுல்கிப்லி முகமது அல்-பக்ரியால் பரிசீலனை செய்யப்பட்டது.

இதன் பின்னர், ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மத நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களிடம் இது சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.பாடகரும் இசையமைப்பாளருமான யாசின் சுலைமான் சம்பந்தப்பட்ட உயர்மட்ட வழக்குகளைத் தொடர்ந்து, போதைப்பொருள் கொள்கை சீர்திருத்தம் குறித்த விவாதங்கள் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன.

கஞ்சா வைத்திருந்தது, 17 கஞ்சா செடிகளை வளர்த்தது மற்றும் ஆபத்தான போதைப் பொருளை உட்கொண்டது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளுக்காக யாசின் சுலைமானுக்கு முன்பு ஆயுள் தண்டனையும் 16 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.இருப்பினும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்ததுடன், சிலாங்கூர் சுல்தானின் அனுமதியின் பேரில் பேராக், உலு கிந்தாவில் உள்ள பஹாஜியா மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உத்தரவிட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.