பன்றி வளர்ப்பு விவகாரம்: ரோணி லியூ மீது சட்ட நடவடிக்கை எடுக்க இஸாம் ஹஷிம் பரிசீலனை

1 ஜூன் 2026, 8:51 AM
பன்றி வளர்ப்பு விவகாரம்: ரோணி லியூ மீது சட்ட நடவடிக்கை எடுக்க இஸாம் ஹஷிம் பரிசீலனை

ஷா ஆலம், மே 31: சிலாங்கூர் மாநிலத்தில் பன்றி வளர்ப்பு விவகாரம் தொடர்பில், தன் மீது அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்திய முன்னாள் ஜசெக (DAP) தலைவர் ரோணி லியூ மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் (எக்ஸ்கோ) டத்தோ ஐஆர். இஸாம் ஹஷிம் பரிசீலித்து வருகிறார்.

சிலாங்கூரில் பன்றி வளர்ப்புத் தொழிலை முடிவுக்குக் கொண்டு வந்ததற்குத் தாம் தான் முக்கியக் காரணம் என ரோணி முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும், அது பொறுப்பற்ற முறையில் கூறப்பட்டுள்ளது என்றும்
இஸாம் கூறினார்.

"இந்தக் குற்றச்சாட்டுகளில் மிக மோசமான அவதூறு கூறுகள் உள்ளனவா என்பதை எனது வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து வருகிறேன். என் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகளே என்பதால் இது குறித்து ஆலோசித்து வருகிறேன்."

"முதலாவதாக, சிலாங்கூரில் பன்றி வளர்ப்பை நிறுத்துவது எனது சொந்த யோசனை என அவர் ரோணி கூறுகிறார். இது எவ்வித அடிப்படையும்
ஆதாரமுமற்ற குற்றச்சாட்டாகும்," என்று இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில் அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் அனைத்து முடிவுகளும் நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப, மாநிலச் செயற்குழு கூட்டத்தின் (MMKN) வாயிலாகக் கூட்டாகவே எடுக்கப்படுகின்றன என்று பாண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினருமான அவர் விளக்கினார்.

அவர் கூறுகையில், சிலாங்கூரில் பன்றி வளர்ப்புப் பிரச்சினை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்து வருவதாகவும், இதற்கு முன் ஒருபோதும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இத்தொழிலை புக்கிட் தாகாருக்கு மாற்றுவதற்கான முன்மொழிவு தனது தனிப்பட்ட யோசனை அல்ல என்றும், மாறாக சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் முடிவே அது என்றும் அவர் கூறினார்.

"அங்குள்ள முதலீட்டாளர்களில் ஒருவருக்கு புக்கிட் தாகாரில் பண்ணை இருந்ததால், இந்த யோசனை குறித்து விரிவாகவிவாதிக்கப்பட்டது.
எனக்கு அங்கு எந்த நிலமும் இல்லாததால் இது எனது யோசனை அல்ல."

"மேலும், அந்த இடம் நகர்ப்புற எல்லையில் இருப்பதோடு, தற்போதைய பன்றி வதைக்கூடத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது. இருந்தபோதிலும், சிலாங்கூர் சுல்தான் இது குறித்து உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டோம்," என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, வியாழக்கிழமையன்று ரோணி லியூ தனது முகநூல் பதிவில், உள்ளூர் பன்றி வளர்ப்புத் தொழிலை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு
இஸாம் தான் பொறுப்பு என்றும், அவர் பண்ணையாளர்களை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், இந்த விவகாரம் சிலாங்கூர் அமானா (AMANAH) கட்சிக்கு உள்ள வாக்காளர் ஆதரவைப் பாதிக்கும் என்றும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினரான அவர் வாதிட்டிருந்தார்.

மாநிலத்தில் பன்றி வளர்ப்புப் பண்ணைகள் இருப்பதைத் தாம் விரும்பவில்லை என சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் பிறப்பித்த உத்தரவை மாநில அரசு செயல்படுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

அதே வேளையில், பாதித்த பண்ணையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மாற்றுத் தொழில்களுக்கு மாறுவதற்கு மாநில அரசு உதவி செய்து அவர்களின் நலனில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.