கோலாலம்பூர், ஜூன் 1: ருக்குன் நெகாரா (Rukun Negara) கொள்கைகளைப் பின்பற்ற விரும்பாத தனிநபர்கள், மலேசியக் குடிமக்கள் என்று அழைக்கப்படத் தகுதியற்றவர்கள் என்று யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
1970, ஆகஸ்ட் 31-ஆம் தேதி அறிமுகப்படுத்தப் பட்ட ருக்குன் நெகாரா, இன ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்பவும் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் ஒவ்வொரு மலேசியரும் எடுத்துக்கொண்ட உறுதிமொழி மற்றும் சத்தியப்பிரமாணம் ஆகும் என்று மாமன்னர் குறிப்பிட்டார்.
"எனவே, அனைத்து தரப்பினரும் ருக்குன் நெகாராவின் ஒவ்வொரு கொள்கையையும் உள்வாங்கி, மலேசியர்களாகிய நமது வாழ்வில் அதனைக் கடைப்பிடித்து, ஒரு வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
"ஆகவே, ருக்குன் நெகாரா கொள்கைகளைப் பின்பற்ற விரும்பாத மலேசியர்கள் யாராவது இருந்தால், அவர்கள் மலேசியக் குடிமக்கள் என்று அழைக்கப்படத் தகுதியற்றவர்கள் என்று நான் அறிவுறுத்துகிறேன்," என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற யாங் டி-பெர்துவான் அகோங்கின் அதிகாரப் பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவில் மாமன்னர் இவ்வாறு உரையாற்றினார்.
இவ்விழாவில் ராஜா பெர்மைசூரி அகோங் ராஜா சாரித் சோஃபியாவும் கலந்து கொண்டார்.
மேலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு குடிமகனும் ஒற்றுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதோடு, ருக்குன் நெகாரா கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் யாங் டி-பெர்துவான் அகோங் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நாட்டின் வலிமைக்கு ஒற்றுமையே அடிப்படை என்று மாமன்னர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சில தரப்பினர் வரம்பு மீறிச் செயல் பட்டதாலும், மற்றவர்களை அவ-மதித்ததாலும், நாட்டின் இனம் மற்றும் இறையாண்மை மீதான மரியாதையை இழந்ததாலும் வெடித்த மே 13, 1969 இனக் கலவரம் என்ற நாட்டின் இருண்ட கால வரலாற்றிலிருந்து அனைத்து தரப்பினரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
"இந்தச் சம்பவம் (மே 13) மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, நாட்டின் ஸ்திரத்தன்மையை அழித்தது. மீண்டும் இது போன்றதொரு துயரச் சம்பவம் நிகழ அனுமதிக்கக் கூடாது," என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஜூலை 20, 2024 அன்று சுல்தான் இப்ராஹிம் யாங் டி-பெர்துவான் அகோங்காக பதவியேற்ற பிறகு அவர் சிறப்பிக்கும் மூன்றாவது விருது வழங்கும் விழா இதுவாகும்.
இந்த ஆண்டு யாங் டி-பெர்துவான் அகோங்கின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டுமொத்தமாக 161 நபர்களுக்குக் கூட்டரசு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ருக்குன் நெகாரா கொள்கைகளைப் பின்பற்ற விரும்பாதவர்கள் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்
1 ஜூன் 2026, 6:00 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?






