ஷா ஆலம், மே 30: வெள்ள அபாயங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக மாநிலத்தின் தாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில், நெதர்லாந்து பயன்படுத்தும் அணுகு முறையை ஆராய்வதன் மூலம் சிலாங்கூர் தனது வெள்ளத் தணிப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
விரிவான நதி நிர்வாகம் மற்றும் கடல் பகுதி நீர் சேமிப்பு சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஆகியவை இதில் அடங்கும். கடந்த ஆண்டு முதல் சபாக் பெர்ணமில் நெதர்லாந்து அரசாங்கம் மேற்கொண்ட ஒரு ஆய்வைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த ஆய்வில், தடுப்புச் சுவர்கள் கட்டும் வழக்கமான முறைகளுடன், சூழலியல் தீர்வுகள், கடலோரப் பாதுகாப்பு மற்றும் புதுமையான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை இணைப்பது குறித்து ஆராயப் பட்டது. பருவநிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்வது, வெள்ளத்தைத் தாங்கும் திறன் மற்றும் நிலையான நகரத் திட்டமிடல் ஆகிய அம்சங்களில் நெதர்லாந்தின் அனுபவத்தை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், அதனை உள்ளூர் சூழ்நிலைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
"திடீர் வெள்ளத்தைக் கையாளுவதில் எல்லா இடங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரே தீர்வு என்று எதுவும் இல்லை. குறுகிய கால நடவடிக்கைகளுடன், ஆற்றின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் நதி நிர்வாகத்தை உள்ளடக்கிய நீண்ட கால வியூகமும் சிலாங்கூருக்குத் தேவைப்படுகிறது.
"கடலுக்குள் நீர் வெளியேற்றப் படுவதைத் தடுக்கும் அதிக அலைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, கடல் பகுதிகளில் நீரைச் சேமித்து வைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் நாம் ஆராய வேண்டும்," என்று நேற்று மலேசியாவுக்கான நெதர்லாந்து தூதர் ஜாப் வெர்னரைச் சந்தித்த பின்னர், தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நதி நீரோட்ட நிர்வாகம், புயல் அலைத் தடுப்புச் சுவர்கள் கட்டுதல் மற்றும் பலத்த மழையின் போது வடிகால் அமைப்புகளின் மீதான அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நெதர்லாந்தின் புகழ்பெற்ற ‘டெல்டா வொர்க்ஸ்’ (Delta Works) மற்றும் ‘ரூம் ஃபார் தி ரிவர்’ (Room for the River) திட்டங்களின் தத்துவத்திற்கு இந்த அணுகுமுறை ஒத்திருப்பதாக அமிருடின் கூறினார்.
மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் சுல்தான் மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஆணைக்கு இணங்க, வெள்ளத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் சிக்கலாகி வரும் வெள்ளச் சவால்களை கையாளுவதற்கு, சிலாங்கூர் இனி தற்காலிக-மான அல்லது தனித் தனியான அணுகுமுறை-களை நம்பியிருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
"டிசம்பர் 2021 பெரும் வெள்ள அனர்த்தத்திற்குப் பிறகு, தாமான் ஸ்ரீ மூடா போன்ற பகுதிகளில் பாதிப்புகள் குறைந்துள்ளமை உள்ளிட்ட முன்னேற்றங்களை நாம் கண்டுள்ளோம். இருப்பினும், இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதுடன், அவை இன்னும் விரைவாகச் செயல்படுத்தப் பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
இந்த விவாதத்தில் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS), பொதுப் பணித் துறை (JKR), லண்டாசான் லுமாயான் சென். பெர்ஹாட் மற்றும் சிலாங்கூர் பருவநிலை ஏற்பு மையம் உள்ளிட்ட பல கூட்டரசு மற்றும் மாநில நிறுவனங்கள் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் தொகை அடர்த்தி மற்றும் உள்ளூர் சவால்களைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தின் மூன்று முக்கிய நதிப் படுகைகளான சுங்கை லங்காட், சுங்கை கிள்ளான் மற்றும் சுங்கை சிலாங்கூர் ஆகியவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளை ஆராய்வதே அடுத்த கட்டக் கவனம் என்று அமிருடின் தெரிவித்தார்.
அதேவேளை, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தாங்கும் திறனை வலுப்படுத்தும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தின் நிலப்பரப்பில் 31 விழுக்காட்டிற்கும் அதிகமான பகுதியை வனக் காப்பகங்களாகப் பாதுகாப்பது உட்பட, வளர்ச்சிக்கும் நிலைத் தன்மைக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதில் சிலாங்கூர் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.







