விசாக தினம் மற்றும் மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு இலவச (பேரி) படகுச் சேவை
ஜார்ஜ் டவுன்- :விசாக தினம் மற்றும் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்டு, மலேசியக் குடிமக்களுக்காக மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரு தினங்களுக்கு இலவச (பேரி) படகுச் சேவை வழங்கப்படும் என பினாங்கு துறைமுக ஆணையம் (SPPP) மற்றும் பினாங்கு போர்ட் செண்டிரியான் பெர்ஹாட் (PPSB) அறிவித்துள்ளன.
பினாங்கு துறை முக ஆணையத்தின் தலைவர் டத்தோ இயோ சூன் ஹின் கூறுகையில், சுல்தான் அப்துல் ஹலீம் முனையத்தில் (PSAH) இருந்து ராஜா துன் ஊடா முனையம் (PRTU) வரையிலான இருவழிப் பயணங்களுக்கு இந்தக் கட்டண விலக்கு பொருந்தும் என்றார்."குறிப்பாக பண்டிகைக் காலங்களில் மலேசியர்களின் பயணத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், திறமையான பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்கு விக்கவும் SPPP மற்றும் PPSB கொண்டுள்ள தொடர் உறுதிப்பாட்டின் வெளிப்பாடே இந்த முயற்சி," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு விசாக தினக் கொண்டாட்டத்தின் போது, 7,127 பாதசாரிகளும், 2,221 இருசக்கர வாகன ஓட்டிகளும் (பேரி) படகுச் சேவையைப் பயன்படுத்தியதாக இயோ மேலும் கூறினார். 2025 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2,347,066 பாதசாரிகளும், 784,065 இருசக்கர வாகனப் பயணிகளும் படகுச் சேவையைப் பயன் படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த (பேரி) இலவச படகுச் சேவை மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன், விசாக தினம் மற்றும் மாமன்னரின் பிறந்தநாளை மக்கள் மிகவும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாட ஒரு வாய்ப்பை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் திருப்திக்கு முன்னுரிமை அளித்து, படகுச் சேவைகள் சீராக இயங்குவதை உறுதிசெய்ய SPPP மற்றும் PPSB உறுதியுடன் செயல்படும் என்றும் இயோ கூறினார்.








