பாங்கி, மே 30: தொண்டை வலி உள்ளவர்கள் அல்லது தங்களின் உரையாடலை மற்றவர்கள் கேட்கக் கூடாது என நினைப்பவர்கள், கிசுகிசுப்பாக அல்லது மிகவும் மெதுவாகப் பேசுவதை ஒரு சிறந்த வழியாகக் கருதுகின்றனர்.
அப்படிப் பேசுவது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து கிசு கிசுப்பாகப் பேசும் பழக்கம் குரல் நாண்களை (vocal cords) கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.கிசு கிசுப்பாகப் பேசும்போது குரல்வளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பலரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக, மலேசிய தேசியப் பல்கலைக்கழக (UKM) மருத்துவமனையான HCTM-இன் காது, மூக்கு, தொண்டை (ENT) நிபுணரும் விரிவுரையாளரு-மான டாக்டர் நதிரா முகமது சுக்ரி தெரிவித்தார்.
"கிசுகிசுப்பது குரல் நாண்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. கிசுகிசுக்கும் போது, சாதாரண குரல் இல்லாமல் ஒலியை எழுப்புவதற்காக, கழுத்து தசைகளையும் குரல் நாண்களையும் மக்கள் கட்டாயப் படுத்திப் பயன் படுத்துகிறார்கள்."இதை மீண்டும் மீண்டும் அல்லது நீண்ட நேரத்திற்குச் செய்யும் போது, குரல் நாண்களில் இறுக்கம் ஏற்பட்டு, ஆரோக்கியமான முறையில் குரல் உருவாகும் விதம் பாதிக்கப்படலாம்," என்று சமீபத்தில் உலகக் குரல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பெர்னாமாவிடம் அவர் கூறினார்.
டாக்டர் நதிரா மேலும் கூறுகையில், இவ்வாறு தவறான முறையில் குரலைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் அழுத்தமானது, குரல் நாண்களில் முடிச்சுகள் (nodules), பாலிப்கள் (polyps) மற்றும் நீர்க்கட்டிகள் (cysts) போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்றார்.
அதிக சத்தமாகக் கத்துவது அல்லது பேசுவதும் குரல் நாண்களில் காயங்களை ஏற்படுத்தும்; குறிப்பாக குரல் மடிப்புகளில் சிறிய ரத்தக்கசிவை ஏற்படுத்தி, அது பாலிப்கள் உருவாக வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"குரல் நாண்களில் நீர்க்கட்டி அல்லது பாலிப் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால், அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆனால் குரல் நாண்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சையானது தழும்புகளை ஏற்படுத்தி, நீண்ட கால அடிப்படையில் குரலின் தரத்தைப் பாதிக்கக்கூடிய அபாயத்தையும் கொண்டுள்ளது. "எனவே, வருமுன் காப்பதே சிறந்தது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
ஒருவருக்குக் குரல் தொடர்பான பிரச்சனை உள்ளதா அல்லது தவறான முறையில் குரலைப் பயன் படுத்துகிறாரா என்பதைக் கண்டறிய ஆரம்பக் கட்ட பரிசோதனை மிகவும் அவசியமாகும்," என்று அவர் கூறினார்.
நோயாளிகளிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சனைகளில் ஒன்று ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux) மற்றும் கத்துவது, நீண்ட நேரம் பேசுவது அல்லது சிரமப்பட்டுப் பேசுவது போன்ற தவறான குரல் பயன்பாடு ஆகும் என்று டாக்டர் நதிரா கூறினார்.
"ரிஃப்ளக்ஸ் என்பது வெறும் செரிமானப் பிரச்சனை மட்டுமல்ல; அமிலம் குரல் நாண்களையும் பாதித்து, குரல் கரகரப்பு, தொண்டையில் அசௌகரியம் அல்லது அடிக்கடி தொண்டையைச் செருமுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்," என்று அவர் விளக்கினார்.
இரண்டு வாரங்களுக்கு மேலாகக் குரல் கரகரப்பு நீடித்தல், பேசும்போது குரல் விரைவில் சோர்வடைதல் அல்லது கழுத்து வலிக்கும் அளவுக்குச் சிரமப்பட்டுப் பேசுதல் போன்ற ஆரம்பக் கட்ட அறிகுறிகள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்."இரண்டு வாரங்களுக்கு மேல் குரல் கரகரப்பாக இருந்தால், உடனடியாக ENT நிபுணரைப் பார்த்துப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளாமல் தேன் அல்லது எலுமிச்சையை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்.
"எண்டோஸ்கோபி (endoscopy) பரிசோதனை மூலம் மட்டுமே குரல் நாண்களின் நிலையைக் காண முடியும். இதன் மூலம் முடிச்சுகள், கட்டிகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதைத் துல்லியமாக மதிப்பிட முடியும்," என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆசிரியர்கள், விரிவுரையாள-ர்கள், பேச்சாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பாடகர்கள் போன்ற குரலை அதிகம் பயன்படுத்தும் துறைகளில் உள்ளவர்கள், குரல் நாண்களில் ஏற்படும் காயங்களைத் தவிர்க்கச் சரியான குரல் பயன்பாட்டு நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று HCTM UKM-இன் பேச்சு மருத்துவ மறுவாழ்வு அதிகாரி டாக்டர் நூர் ஷரீனா முகமது சவாவி பரிந்துரைத்தார்.
சரியான நுட்பம் இல்லாமல் குரலை அதிகமாகப் பயன்படுத்துவது குரல் சோர்வு, கழுத்தில் இறுக்கம் மற்றும் படிப்படியாகக் குரலின் தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்."பலரும் குரல் முற்றிலும் கரகரப்பாக மாறிய பின்னரோ அல்லது குரல் முழுமையாகச் செயலிழந்த பின்னரோ தான் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால், பேசும்போது விரைவாகச் சோர்வடைவது, அடிக்கடி தொண்டையைச் செருமுவது அல்லது தொண்டையில் ஏற்படும் அசௌகரியம் போன்ற ஆரம்பக் கட்ட அறிகுறிகளே குரல் நாண்கள் அழுத்தத்தில் உள்ளன என்பதைக் குறிக்கின்றன," என்று அவர் தெரிவித்தார்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, குரலுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பது மற்றும் இருமல், தொண்டை வலி அல்லது சுவாசப் பாதை தொற்று இருக்கும் போது குரல் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவை சிறந்த குரல் பராமரிப்பு முறைகளாகும் என்று டாக்டர் நூர் ஷரீனா குறிப்பிட்டார்.
"ஒவ்வொருவரின் தொழில் மற்றும் வாழ்க்கை முறைத் தேவைகளுக்கு ஏற்ப, பாதுகாப்பான மற்றும் திறமையான சுவாச நுட்பங்கள், குரல் உருவாக்கம் மற்றும் ஒலியதிர்வை (resonance) எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பேச்சு மற்றும் குரல் சிகிச்சையின் மூலம் தனிநபர்கள் கற்றுக்கொள்ளலாம்," என்று அவர் மேலும் கூறினார்.




