ஷா ஆலம், மே 29 - சிலாங்கூர் மாநில மக்களின் பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, குடியுரிமை, தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஆவணங்கள் மற்றும் குடியுரிமையற்றோரின் விவகாரங்கள் போன்ற பல்வேறு ஆவணச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் 'மைசெல்' (MySel) பிரிவு தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.
வறிய நிலையிலுள்ள மக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு உதவும் நோக்கில், சிலாங்கூர் மாநில அரசால் இந்த சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டது என்று மைசெல் பிரிவின் செயல்பாட்டு அதிகாரி திருமதி சாந்தா வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மீடியா சிலாங்கூர் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியச் சமூகத்தினரிடையே அடையாள அட்டை இல்லாதிருப்பதே தங்களின் கவனத்திற்கு வரும் மிக முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
பிறப்பு முறையாகப் பதிவு செய்யப்படாமை, பழைய ஆவணங்களை இழந்துவிடுதல் மற்றும் முந்தைய குடும்பப் பதிவுகளைக் கண்டறிவதில் உள்ள சிரமங்கள் போன்றவையே இதற்கு முதன்மைக் காரணங்களாகும்.
பதின்ம வயதைக் கடந்தும், ஏன் பல தசாப்தங்களாகியும் இன்னும் அடையாள அட்டை இல்லாமல் பலர் தங்களை நாடி வருவதாகக் கூறிய அவர், இவர்கள் மலேசியாவிலேயே பிறந்திருந்தாலும், குடும்ப ஆவணங்கள் முழுமையாக இல்லாததால் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்தார்.

அதே வேளையில், சீனச் சமூகத்தினர் பெரும்பாலும் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பான ஆவணப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குழந்தைப் பருவம் முதற்கொண்டே தங்களின் சொந்தப் பிள்ளையைப் போல வளர்த்தாலும், சட்டப்பூர்வமாகத் தத்தெடுப்பு ஆவணங்களை அவர்கள் ஆரம்பத்திலேயே முறையாகப் பதிவு செய்வதில்லை. இதனால் அப்பிள்ளைகள் வளரும்போது, அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டையைப் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
மறுபுறம், மலாய் சமூகத்தினரிடையே பெற்றோரின் திருமணம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாததால், அவர்களின் பிள்ளைகளின் பிறப்புப் பதிவுச் செயல்முறைகள் பாதிக்கப்படும் பிரச்சனை நீடிக்கிறது.
இது தவிர, உள்ளூர் மக்கள் வெளிநாட்டினரைத் திருமணம் செய்து கொண்டு, அத்திருமணத்தை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யத் தவறும் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன. இத்தகைய சூழலில் பிறக்கும் குழந்தைகளுக்குப், பெற்றோரின் திருமண நிலை மற்றும் குடியுரிமை ஆகியவற்றை முதலில் உறுதிப்படுத்த வேண்டியிருப்பதால், ஆவணப் பணிகள் மேலும் சிக்கலாகிவிடுகின்றன என்று திருமதி சாந்தா விளக்கமளித்தார்.
இத்தகைய ஆவணப் பற்றாக்குறையானது தனிநபர்களின் வாழ்க்கையில் கல்வி, முறையான வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவச் சேவைகளைப் பெறுவதில் முட்டுக்கட்டையாக அமைகிறது. அதோடு, சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் 'பிங்காஸ்' (BINGKAS) எனப்படும் நல்வாழ்வு உதவித்தொகை, கல்வி உதவிகள் மற்றும் இதர நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் இவர்கள் தகுதி அற்றவர்களாகிவிடுகிறார்கள்.
நீண்ட காலமாக சிலாங்கூரில் வசித்தாலும், அடையாள அட்டை இல்லாததாலும் குடியுரிமை உறுதிப்படுத்தப்படாததாலும் பலரால் இந்த உதவிகளைப் பெற முடிவதில்லை.
குடியுரிமையற்ற அல்லது 'ஸ்டேட்லெஸ்' (Stateless) நபர்கள் தொடர்பான வழக்குகளுக்கு, தேசியப் பதிவுத் துறை (JPN), உள்துறை அமைச்சு (KDN), குடிநுழைவுத் துறை மற்றும் சமூக நலத்துறை (JKM) ஆகியவற்றுடன் இணைந்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வாக, மைசெல் பிரிவு வெறும் விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதோடு நின்றுவிடாமல், விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், ஆவண சரிபார்ப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பணிகளையும் முழுமையாக மேற்கொள்கிறது.
பழைய பதிவுகளைச் சரிபார்த்து கூடுதல் ஆவணங்களைத் திரட்ட வேண்டியிருப்பதால், ஒவ்வொரு வழக்கின் தன்மைக்கேற்ப இதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மைசெல் திட்டம் தொடங்கப்பட்டது முதல், பல்வேறு அரசு முகமைகளின் ஒத்துழைப்போடு பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் குடியுரிமை தொடர்பான 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ளன.
மேலும் 5,000 வழக்குகள் தற்சமயம் விசாரணையிலும் அடுத்தகட்ட நடவடிக்கையிலும் உள்ளன. எனவே, பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளின் பிறப்பை பதிவு செய்யவும், திருமணங்களை அதிகாரப்பூர்வமாகப் பதியவும், குடும்ப ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டும் என்று திருமதி சாந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.








