தடம் புரண்ட எல்.ஆர்.டி: ரயில் சேவை அடுத்த புதன்கிழமைக்குள் வழமைக்குத் திரும்பும் என அமைச்சர் எதிர்பார்ப்பு

29 மே 2026, 9:17 AM
தடம் புரண்ட எல்.ஆர்.டி: ரயில் சேவை அடுத்த புதன்கிழமைக்குள் வழமைக்குத் திரும்பும் என அமைச்சர் எதிர்பார்ப்பு

கோலாலம்பூர், மே 29: நேற்று சான் சௌவ் லின் (Chan Sow Lin) நிலையத்திற்கு அருகே ரயில் தடம் புரண்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் (Ampang/Sri Petaling) எல்.ஆர்.டி (LRT) சேவை, குறைந்தபட்சம் அடுத்த புதன்கிழமைக்குள் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடம் புரண்ட அந்த ரயில் இன்று கிரேன் (crane) மூலமாக அப்புறப் படுத்தப்பட உள்ளதாகவும், அதன்பிறகே தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கும் எனவும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

ஆறு பெட்டிகளைக் கொண்ட அந்த ரயிலின் முதல் பெட்டி, புத்ரா ஹைட்ஸ் (Putra Heights) நோக்கிச் செல்லும் சரியான பாதையில் சென்றதாகவும், ஆனால் அதனைத் தொடர்ந்த பெட்டி தவறுதலாக அம்பாங் நோக்கிய பாதையில் நுழைந்ததாலேயே, தண்டவாளத்தை மாற்றும் (track switch) வேளையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

"பின்னால் இருந்த பெட்டியின் இழுவிசை காரணமாக முதல் பெட்டி வெளியே இழுக்கப்பட்டது, இதனால் முதல் மற்றும் இரண்டாவது பெட்டிகள் முற்றிலுமாகத் தடம் புரண்டன," என அவர் விளக்கினார்.

சான் சௌவ் லின் எல்.ஆர்.டி நிலையத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள விபத்து நடந்த இடத்தை இன்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தண்டவாளத்தை மாற்றும் கருவி அல்லது சுவிட்ச் (switch) அமைப்பு ஏன் முறையாகச் செயல் படவில்லை என்பதற்கான காரணம் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்," என்றார்.

இந்தச் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிக்குழு, பிரசரானா (Prasarana) நிறுவனத்தின் பிரதிநிதிகள் தலையீடு இல்லாத ஒரு சுதந்திரமான குழுவாகும் என்று லோக் குறிப்பிட்டார். இக்குழுவிற்கு விமான விபத்து விசாரணைப் பணியகத்தின் (BSKU) தலைமை ஆய்வாளர் மேஜர் ஜெனரல் டான் சீ கீ தலைமை தாங்குவார்; ரயில்வே பொறியியல் நிபுணர்களும் இதில் அடங்குவர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் இந்த விசாரணை அறிக்கையைத் தயார் செய்ய, அக்குழுவிற்கு அதிகபட்சமாக 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

"இந்தச் சம்பவம் மனிதத் தவறா, சிஸ்டம் (system) கோளாறா அல்லது சிஸ்டம் செயலிழப்பால் ஏற்பட்டதா என்பதை விசாரணை ஆராயும். விசாரணையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த அறிக்கை பொதுமக்களுக்கும் அறிவிக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி, பிரசரானாவின் பராமரிப்பு முறைகள், செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் (OCC) பதிவுகள், சிக்னல் அமைப்பு மற்றும் விபத்திற்கு வழிவகுத்திருக்கக் கூடிய பிற காரணிகள் குறித்தும் விசாரணையில் கவனிக்கப்படும்.

விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய OCC-யில் பணியிலிருந்த ஊழியர்கள், ரயில் ஓட்டுநர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்படும் என்று லோக் தெரிவித்தார்.

பிரசரானாவால் நிர்வகிக்கப்படும் எல்.ஆர்.டி மற்றும் எம்.ஆர்.டி (MRT) உள்ளிட்ட ஒட்டுமொத்த ரயில் போக்குவரத்து அமைப்புகள் மீதும் விரிவான தணிக்கை (internal audit) மேற்கொள்ள படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் மறுக்கவில்லை.

தற்போதைய ரயில் செயல்பாடுகள் குறித்து பேசிய லோக், அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் பாதையில் உள்ள அனைத்து நிலையங்களும் தொடர்ந்து இயங்குகின்றன என்றும், ஆனால் ரயில்களின் இயக்கத்தை உறுதி செய்வதற்காக மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணை பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

சீரமைப்புப் பணிகள் முடியும் வரை, தற்போதைக்கு பயணிகள் குறிப்பிட்ட நிலையங்களில் ரயில்களை மாற்றிக் கொள்ள வேண்டும்; இதனால் ரயில் வருகைக்கான கால இடைவெளி (frequency) ஆறு முதல் எட்டு நிமிடங்களாக அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று காலை நிகழ்ந்த சம்பவத்தில், தண்டவாளத்தின் சுவிட்ச் பழுதான காரணத்தால் அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் பாதையில் சென்ற ரயில் சான் சௌவ் லின் நிலையத்திற்கு அருகே தடம் புரண்டது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது; இருப்பினும், ரயிலில் இருந்த 25 பயணிகளும் எவ்வித காயங்களுமின்றிப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.