கோலாலம்பூர், மே 29: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான கோலாலம்பூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை (PBAKL) அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் விழா அரங்கிற்கு வருகை தந்த பிரதமரை, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான புத்தகப் பிரியர்களும் பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடிர் மற்றும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்தத் தொடக்க விழாவின் ஓர் அங்கமாக, மலேசியாவின் பிரபல கேலிச்சித்திரக் கலைஞர் சுல்கிஃப்லி எஸ்.எம். அன்வார் உல்ஹக், அதாவது 'சுனார்' (Zunar) என்ற புனைப்பெயரால் பரவலாக அறியப்படும் கலைஞரின் (Membangun Masyarakat MADANI Versi Kartun) என்ற புதிய புத்தகத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் மலேசியா மடாணி அரசாங்கத்தின் நல்லாட்சியை வலுப்படுத்தும் முயற்சிகள் ஆகியவற்றை, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கேலிச்சித்திர விளக்கப்படங்கள் மூலம் இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 43-ஆவது கோலாலம்பூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி, இன்று தொடங்கி எதிர்வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை மொத்தம் 10 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








