சுபாங் ஜெயாவில் 1,474 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

27 மே 2026, 9:52 AM
சுபாங் ஜெயாவில் 1,474 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

சுபாங் ஜெயா, மே 27: சுபாங் ஜெயா மாநகராட்சி மன்ற (MBSJ) நிர்வாகப் பகுதியில், இந்த ஆண்டின் 19-ஆவது தொற்றுநோயியல் வாரம் (Minggu Epidemiologi ke-19) வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 1,474 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இப்பகுதியில் ஐந்து இடங்கள் டிங்கி பரவக்கூடிய தீவிர 'ஹாட்ஸ்பாட்' (Hotspot) பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

யுஎஸ்ஜே 3/2 (USJ 3/2), தாமான் பிங்கிரான் யுஎஸ்ஜே 2 (Taman Pinggiran USJ 2), தாமான் சுங்கை பெசி இண்டா - பிளாட் லாமா (Taman Sungai Besi Indah - Flat Lama), தாமான் பூகிட் செர்டாங் 5 (Taman Bukit Serdang 5) மற்றும் பத்து 13 கம்போங் தெங்கா ஏ (Batu 13 Kampung Tengah A) ஆகியவையே அந்த ஐந்து ஹாட்ஸ்பாட் இடங்கள் ஆகும்.

சுபாங் ஜெயா மாநகர் மேயர் டத்தோ அமிருல் அஜிசான் அப்துல் ரஹிம் இது குறித்துக் கூறுகையில், டிங்கி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எம்பிஎஸ்ஜே மற்றும் சம்பந்தப்பட்ட பிற அரசு முகமைகள் இணைந்து ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைச் சோதனையிடுதல், லார்வாசிட் (Larvasid) மருந்து தெளித்தல் மற்றும் புகை அடித்தல் (Fogging) உள்ளிட்ட தீவிரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

"குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் டிங்கித் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று நேற்று நடைபெற்ற எம்பிஎஸ்ஜே மாதாந்திர முழு வாரியக் கூட்டத்தில் அவர் கூறினார்.

அதே வேளையில், பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து 'தேடுவோம் அழிப்போம்' (Cari dan Musnah) என்ற சுயவிழிப்புணர்வு உத்தியைக் கடைப்பிடிக்குமாறும், துப்புரவுபணி (Gotong-royong) நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். மேலும், யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தத் தொற்று பரவலை மிகவும் திறம்பட ஒடுக்குவதை உறுதி செய்வதற்காக, சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் தனது கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பலப்படுத்தும் என்றும் மேயர் அமிருல் அஜிசான் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.