B15 பயோ டீசல் அமலாக்கத்தால் நாட்டின் செம்பனை எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப் படாது

26 மே 2026, 6:05 AM
B15 பயோ டீசல் அமலாக்கத்தால் நாட்டின் செம்பனை எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப் படாது

புத்ராஜெயா, மே 26 - தீபகற்ப மலேசியா முழுவதும் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள B15 பயோ டீசல் திட்டம், நாட்டின் செம்பனை எண்ணெய் ஏற்றுமதி அளவை பாதிக்காமல் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என எதிர் பார்க்கப் படுகிறது.

அதே வேளையில், இந்த விரிவான நடவடிக்கையானது உள்ளூர் செம்பனைத் தொழில்துறைக்கு ஆதரவளிப்பதோடு, நாட்டின் பசுமைத் திட்டங்களை துரிதப்படுத்தவும் உதவும்.

B10-லிருந்து B15 ஆக பயோ டீசல் கலவையை அதிகரிக்கும் இந்த நடவடிக்கை, தொழில்துறையின் தயார்நிலை, விநியோகம் மற்றும் தற்போதைய உள்கட்டமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு திட்டமிட்ட முறையில் செயல்படுத்தப் படுவதாக தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நோராய்னி அகமது தெரிவித்தார்.

செம்பனை ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, நாட்டின் செம்பனை எண்ணெய் விநியோகத் திறன் உட்பட இந்த அமலாக்கம் குறித்து அரசாங்கம் விரிவான ஆய்வுகளை மேற் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

"நாங்கள் ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் செம்பனை எண்ணெயை உற்பத்தி செய்து, அதில் 16 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதன் பொருள் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு சுமார் 4 மில்லியன் மெட்ரிக் டன் உபரி இருப்பில் உள்ளது.

"அதில், B15 திட்டத்தின் அமலாக்கத்திற்கு சுமார் 0.8 மில்லியன் மெட்ரிக் டன் மட்டுமே தேவைப்படும். எனவே, இது நாட்டின் ஏற்றுமதி அளவை எந்த வகையிலும் சீர்குலைக்காது" என்று இன்று இங்கு நடைபெற்ற B15 பயோ டீசல் அமலாக்க ஊடகவியலாளர் சந்திப்பிற்குப் பிறகு அவர் தெரிவித்தார்.

தொழில்துறை தரப்பினருடனான சந்திப்பு மற்றும் ஆலோசனைக்குப் பிறகு, தற்போதுள்ள வசதிகளில் பெரிய அளவிலான மேம்படுத்தல்கள் தேவையில்லாமல் செயல்படுத்தக்கூடிய சிறந்த கலவை விகிதமாக B15 தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக நோராய்னி கூறினார்.

"தற்போதுள்ள வசதிகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி, குறுகிய காலக் கட்டத்தில் செயல் படுத்தக்கூடிய பொருத்தமான விகிதமாக B15-ஐ நாங்கள் பார்க்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.