மே 28 முதல் கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலைகளில் கட்டண முறை அமல்

26 மே 2026, 1:14 AM
மே 28 முதல் கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலைகளில் கட்டண முறை அமல்

கோலாலம்பூர், மே 26: கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட ஆபரேட்டரான லிங்காரான் சேகாப் சென்டிரியான் பெர்ஹாட் (LCSB) நிறுவனம், அங்குள்ள சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான கட்டண முறையை இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை எதிர்வரும் மே 28 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் அமலுக்கு வரவுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக எதிர்வரும் மே 28 முதல், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரைத் தவிர்த்து, கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலைக்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டணங்கள் கெந்திங் செம்பாவில் உள்ள கெந்திங் ஹைலேண்ட்ஸ் நுழைவாயில் மற்றும் கோத்தோங் ஜெயா வட்டாரத்தில் உள்ள கோத்தோங் ஜெயா நுழைவாயில் ஆகிய இரண்டு இடங்களிலும் வசூலிக்கப்படும்.

புதிய கட்டண அமைப்பின்படி, முதல் வகுப்பைச் சேர்ந்த கார்கள் அல்லது வேன்களுக்கு இரண்டு நுழைவாயில்களிலும் 5 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும். அதே வேளையில், நடுத்தர அளவிலான லாரிகளுக்கு (வகுப்பு 2) 15 ரிங்கிட்டும், கனரக லாரிகளுக்கு (வகுப்பு 3) 25 ரிங்கிட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், டாக்சிகளுக்கு (வகுப்பு 4) 3 ரிங்கிட் 30 சென்னும், பேருந்துகளுக்கு (வகுப்பு 5) 5 ரிங்கிட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

வகுப்பு 2, 3, 4 மற்றும் 5-ன் கீழ் வரும் வாகனங்கள், இதற்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு வழித்தடம் (Lorong Khas) அல்லது வாகன எண் பலகை அங்கீகார (LPR) வழித்தடத்தின் மூலமாக மட்டுமே நுழைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், அவசரக்கால வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கெந்திங் ஹைலேண்ட்ஸில் உள்ள அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் சொந்த வாகனங்களுக்கு இந்தச் சாலைக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, எதிர்வரும் ஜூன் 28 முதல், கெந்திங் ஹைலேண்ட்ஸில் நிரந்தரமாக வசிப்பவர்களில் தகுதியானவர்களுக்கு, முதல் வகுப்பைச் சேர்ந்த அதிகபட்சமாக இரண்டு வாகனங்களை பதிவு செய்ய லிங்காரான் சேகாப் நிறுவனம் அனுமதிக்கும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், எல்.பி.ஆர் அல்லது சிறப்பு வழித்தடத்தைப் பயன்படுத்தும் போது, சாதாரண கட்டணத்தை விட 10 விழுக்காடு குறைவான சலுகைக் கட்டணத்தைப் பெறலாம். மேலும், இந்த வாகனங்களுக்கு ஜூன் 28-ஆம் தேதிக்கு முன்னர் எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சலுகையாக, பதிவுசெய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்களுக்காக ஆறு மாத கால சீசன் பாஸ் (Season Pass) திட்டத்தையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தச் சீசன் பாஸை வைத்திருப்பவர்கள், அது செல்லுபடியாகும் காலம் முழுவதும் எல்.பி.ஆர் அல்லது சிறப்பு வழித்தடத்தின் வழியாக எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி எத்தனை முறை வேண்டுமானாலும் கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையைப் பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் அவர்கள் சிறந்த வசதிகளையும், கணிசமான பணச் சேமிப்பையும் பெறலாம். இதில் விருப்பமுள்ள நிரந்தர குடியிருப்பாளர்கள், உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, தேவையான கட்டணத்தைச் செலுத்தி இந்த சீசன் பாஸைப் பெற்றுக் கொள்ளலாம் என்று லிங்காரான் சேகாப் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.