விளையாட்டுத் துறையில் புதிய தடகள வீரர்கள் முத்திரை பதிக்க உதவ மந்திரி புசார் இன்கார்பரேட்டட் (MBI) அறக்கட்டளை உறுதி

25 மே 2026, 7:51 AM
விளையாட்டுத் துறையில் புதிய தடகள வீரர்கள் முத்திரை பதிக்க உதவ மந்திரி புசார் இன்கார்பரேட்டட் (MBI) அறக்கட்டளை உறுதி

ஷா ஆலாம், மே 25: விளையாட்டுத் துறையில் தடம் பதிக்கத் துடிக்கும் புதிய விளையாட்டு வீரர்களுக்கு, நிதி  உதவி மற்றும் தொழில்முறை மேம்பாடு என பல்வேறு வழிகளில் ஆதரவளிக்க சிலாங்கூர் மந்திரி புசார் இன்கார்பரேட்டட் (MBI) அறக்கட்டளை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

பிற தரப்பினரிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்காத வீரர்களைக் கண்டறிந்து, அவர்கள் விளையாட்டுத் துறையில் பின்தங்கி விடாமல் தொடர்ந்து முன்னேறுவதை உறுதி செய்யும் நோக்கில் தான் இந்த உதவி வழங்கப் படுவதாக அதன் தலைவர் அஹ்மாட் அஸ்ரி சைனல் நோர் தெரிவித்தார்.

மேலும், திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில், மாநில விளையாட்டு மன்றம் (MSN) மற்றும் சிலாங்கூர் கால்பந்து சங்கம் (FAS) போன்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் அவர்களை இணைக்கும் பாலமாகவும் எம்.பி.ஐ (MBI) அறக்கட்டளை செயல்படுகிறது.

"புதிதாக சாதிக்கத் துடிக்கும் அல்லது பிறரிடமிருந்து உதவி பெற சிரமப்படும் விளையாட்டு வீரர்களுக்கு நாங்கள் எப்போதும் உதவிக்கரம் நீட்டுகிறோம். அவர்கள் பின் தங்கிவிடக் கூடாது என்பதே எங்களின் முக்கிய நோக்கம்.

"நிதி உதவி மட்டுமின்றி, மாநில அரசும் எம்.பி.ஐ அறக்கட்டளையும் திறமையான வீரர்களைச் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைத்து விடுகின்றன. உதாரணமாக, கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் ஒருவரை சிலாங்கூர் கால்பந்து சங்கத்துடனும், பிற விளையாட்டு வீரர்களை மாநில விளையாட்டு மன்றத்துடனும் நாங்கள் இணைத்து வைக்கிறோம்" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள டாருல் எஹ்சான் கட்டடத்தில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந் நிகழ்ச்சியில், இளம் சிறுவர்கள் மற்றும் தொழில்முறை வீரர்கள் என மொத்தம் 18 பேருக்கு, அவர்களின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக எம்.பி.ஐ அறக்கட்டளையின் மூலம் ஒட்டுமொத்தமாக RM65,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

குத்துச்சண்டை, மோட்டார் விளையாட்டு, பாரா கோல்ஃப், டென்னிஸ், ஜூடோ, கால்பந்து, 'புஷ் பைக்' (push bike) மற்றும் பூப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உதவி வழங்கப் பட்டுள்ளதாக அஹ்மாட் அஸ்ரி கூறினார்.

விளையாட்டு வீரர்களுக்கு என பிரத்தியேகமாக தனி ஒதுக்கீடு எதுவும் எம்.பி.ஐ அறக்கட்டளையில் இல்லை என்றாலும், சமூகம் மற்றும் பேரிடரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் ‘அதிகாரமளித்தல்’ (empowerment) நிதியைப் பயன் படுத்தியே இந்த உதவி வழங்கப் பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

"இந்த உதவியின் மூலம் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, எதிர் காலத்தில் மாபெரும் வெற்றிகளை ஈட்டுவார்கள் என்றும், இதன் வழி சிலாங்கூர் மற்றும் மலேசியாவிற்குப் பெருமை சேர்ப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.