ஷா ஆலாம், மே 25: நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்களை முடிக்கத் தவறியதைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு முதல் ஏழு நிறுவனங்களின் கட்டுமானப் ஒப்பந்தங்களை சிலாங்கூர் பொதுப்பணித்துறை (JKR) ரத்து செய்துள்ளது.
திட்டங்களை மீண்டும் அசல் அட்டவணையின்படி கொண்டுவர வாய்ப்புகளும் உதவிகளும் வழங்கப் பட்ட போதிலும், சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் உரிய அர்ப்பணிப்பைக் காட்டத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அதன் இயக்குநர் ஐ.ஆர். சுக்ரி இஷாக் கூறினார்.
"உண்மையில், சிலாங்கூர் பொதுப் பணித்துறையால் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அபாயகரமான நிலையில் இல்லை. 2017 முதல் ஏழு திட்டங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன என்று நான் கூற முடியும்... அதாவது ஆண்டுக்கு சுமார் ஒரு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
"பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்களை அவ்வளவு எளிதாக பணிநீக்கம் செய்வதில்லை. வழக்கமாக நாங்கள் அவர்களுக்கு உதவுவோம், அசல் ஒப்பந்தப் பாதைக்குத் திரும்ப வழிகாட்டுவோம். 2017 முதல் 2025 வரை, முடங்கிய திட்டங்களால் (Projek sakit) ஏழு நிறுவனங்களின் ஒப்பந்தங்களை மட்டுமே நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
"பணிகளைத் தீவிரப்படுத்த அவர்களுக்கு வாய்ப்புகளும் அறிவிப்புகளும் வழங்கப் பட்டன, ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க அவர்கள் மீண்டும் தவறி விட்டனர். சுகாதார கிளினிக்குகள், சாலைகள், பள்ளிவாசல்கள் போன்ற திட்டங்கள் ரத்து செய்யப் பட்டவற்றுள் அடங்கும். பொதுப்பணித்துறை நியாயமான கால அவகாசத்தையும், வாய்ப்புகளையும் வழங்கியது, ஆனால் ஒப்பந்ததாரர்கள் அர்ப்பணிப்பைக் காட்டாததால், நாங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்தோம்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடிக்க தவறியதால் ஐந்து சதவீத திட்டங்கள் 'முடங்கிய திட்டங்கள்' என வகைப் படுத்தப் பட்டுள்ளதாக சுக்ரி தெரிவித்தார்.
ஜெஞ்ஜாராம் முதல் சிப்பாங் லாமா வரையிலான முச்சந்திப்பு சாலையை மேம்படுத்துதல், சுல்தான் சுலைமான் அரச பள்ளிவாசல் அதிகாரிகளுக்கான குடியிருப்புக் கட்டுமானம் மற்றும் கம்போங் புக்கிட் காப்பார் பொது மண்டபக் கட்டுமானம் ஆகியவை அத்தகைய திட்டங்களில் அடங்கும் என்று அவர் விளக்கினார்.
"ஒப்பந்ததாரர் நிர்ணயிக்கப்பட்ட முன்னேற்றத்தை எட்டாதபோது, அந்தத் திட்டத்தை முடங்கிய திட்டம் என நாங்கள் வரையறுக்கிறோம். முன்னேற்றம் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், நாங்கள் அதனை காலதாமதம் என வகைப் படுத்துகிறோம்; அதற்கு மேல் சென்றால் அது முடங்கியதாகக் கருதப்படும்.
"ஒரு திட்டம் 5 சதவீதம் தாமதமடைவதைக் கண்டால், நாங்கள் தலையீட்டுக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை இயக்குகிறோம். கட்டுமானத் தளத்திற்கு நேரில் சென்று, ஒப்பந்ததாரர் மீண்டும் அசல் பாதைக்குத் திரும்புவதை உறுதிசெய்ய JKR தரப்பில் என்னென்ன உதவிகளைச் செய்ய முடியும் எனப் பார்க்கிறோம்.
"கால அவகாசம் நீட்டிக்கப் பட்ட பிறகும் ஒப்பந்ததாரர் தொடர்ந்து தாமதமாகப் பணியாற்றினால், நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம். நாங்கள் அவர்களுடன் சிறப்பு அமர்வுகளையும் நடத்துவோம், அப்போதும் மேம்பாடு இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான இறுதி அறிவிப்பு வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.
அதே வேளையில், திட்டங்கள் அட்டவணைப்படி செயல் படுத்தப்படுவதை உறுதிசெய்ய சிலாங்கூர் பொதுப்பணித்துறை ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளதாகவும் சுக்ரி தெரிவித்தார்.
"இந்தக் குழு உதவி செய்வதுடன் குறுக்கு தணிக்கையும் (cross audit) செய்யும்... உதாரணமாக கோம்பாக்கில் ஒரு சாலைத் திட்டம் தாமதமாகவோ அல்லது முடங்கிய நிலையிலோ இருந்தால், ஒப்பந்ததாரர் மீண்டும் திட்டத்தை சரிவர செய்வதை உறுதிப்படுத்த அவர்கள் களமிறங்குவார்கள்.
"மூத்த சிவில் பொறியாளர் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு செயல்படுகிறது. மேலும் இதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் அளவு மதிப்பீட்டுப் பொறியாளர்களும் (Jurutera Ukur Bahan) இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு தாமதமான அல்லது முடங்கிய திட்டங்களுக்குச் சென்று பார்வையிட்டு, அதற்கான தலையீட்டு அறிக்கையை வெளியிடும்," என்று அவர் மேலும் கூறினார்.
திட்டங்களை முடிக்கத் தவறிய ஏழு நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்தது சிலாங்கூர் JKR
25 மே 2026, 7:20 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




