முதியோர்கள் மற்றும் 'சாண்ட்விச்' தலைமுறையினருக்கு உதவும் சிலாங்கூர் கேர் நேவிகேட்டர் (Care Navigator Selangor) திட்டம்

25 மே 2026, 3:22 AM
முதியோர்கள் மற்றும் 'சாண்ட்விச்' தலைமுறையினருக்கு உதவும் சிலாங்கூர் கேர் நேவிகேட்டர் (Care Navigator Selangor) திட்டம்

ஷா ஆலாம், மே 25: முதியோர்கள் மற்றும் குடும்பத்தைக் கவனிப்பதில் சவால்களை எதிர்கொள்ளும் 'சாண்ட்விச்' தலைமுறையினருக்கு (Sandwich generation) உதவுவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும் 'சிலாங்கூர் கேர் நேவிகேட்டர்' (Care Navigator Selangor) திட்டத்தை வலுப்படுத்த, உள்ளூர் சமூகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை மாநில அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.

இத்திட்டம் நீண்ட காலப் பராமரிப்பு (Long Term Care - LTC) அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 13-வது மலேசியத் திட்டத்திற்கு (RMK13) ஏற்ப அமைந்திருப்பதாக மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் (எக்ஸ்கோ) அன்ஃபால் சாரி தெரிவித்தார்.

சமூக அடிப்படையிலான ஆதரவின் மூலம், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரின் நலன் தொடர்ந்து கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

"13-வது மலேசியத் திட்டத்தில் நீண்ட காலப் பராமரிப்புக்காக 4 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். இதன் அடிப்படையில் மாநில அரசாங்கத்தின் கீழ் 'கேர் நேவிகேட்டர்' எனப்படும் இப் புதிய திட்டத்தை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

"என்ன வகையான தேவைகள் உள்ளன, அதற்கான வளங்கள் எங்கே இருக்கின்றன, எந்தெந்த அரசு நிறுவனங்களை நாம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை அடையாளம் காண இந்த 'நேவிகேட்டர்' முக்கியமானது," என்று அவர் தனது முகநூல் (Facebook) பதிவில் கூறியுள்ளார்.

தனியாக வசிக்கும் முதியோர்கள் பலரையும், தங்கள் பெற்றோரையும் குடும்பத்தினரையும் அமைதியாகப் பராமரித்து வரும் பிள்ளைகளையும் தாம் சந்தித்திருப்பதாக அன்ஃபால் மேலும் தெரிவித்தார்.

"இந்த 'சாண்ட்விச்' தலைமுறையைச் சேர்ந்த பலர் பார்ப்பதற்கு வலிமையானவர்களாகத் தெரிந்தாலும், உண்மையில் அவர்கள் கடுமையான  பல சவால்களை எதிர்கொள்கின்றனர்," என்று அவர் கூறினார்.

அதே வேளையில், பண்டமாரான் சுகாதார கிளினிக்கிற்குச் சென்று அங்குள்ள தலைமை மருத்துவர் டாக்டர் சிள் (Dr Zil    மற்றும் பண்டமாரான் கிளினிக்கின் முதியோர் மன்றம், மலேசிய உசியா மாஸ் நலச் சங்கம் (Persatuan Kebajikan Usiamas Malaysia) ஆகிய தரப்பினரின் விளக்கவுரையைக் கேட்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகவும் அன்ஃபால் தெரிவித்தார்.

பல்வேறு கருத்துக்களும் அனுபவங்களும் அங்குப் பகிர பட்டதாகக் கூறிய அவர், பொதுமக்களின் உண்மையான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப 'சிலாங்கூர் கேர் நேவிகேட்டர்' திட்டத்தை உருவாக்குவதற்கு, பெறப்பட்ட அனைத்துத் தகவல்களும் வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.