கோலாலம்பூர், மே 23:வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம் மற்றும் தெளிவான கொள்கைகள் இருக்கும் பட்சத்தில், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வியூக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அரசுத் தொடர்புடைய நிறுவனங்கள் (GLC) திட்டமிட்ட இழப்புகளைச் சந்திப்பதை அரசாங்கம் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறது.
நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய முதலீடுகள் மிகவும் முக்கியமானது என்றால், அதில் ஏற்படும் இழப்புகள் குறித்து பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வர்த்தக ரீதியிலான லாபங்கள் முக்கியம் என்றாலும், தொழில்நுட்பம் மற்றும் புதிய வர்த்தக முயற்சிகளில் வியூக முதலீடுகள் மிகவும் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்துறைகளில் ஆபத்துகளை (risks) எதிர் கொள்வதைக் கண்டு அரசாங்கம் அதிகம் கவலைப்படக் கூடாது என்றும் அன்வார் கூறினார்.
"வெளிப்படைத்தன்மை, நல்ல நிர்வாகம் மற்றும் தெளிவான கொள்கை இருக்கும் வரை, இழப்பு என்பது ஒரு தடையல்ல. சில விஷயங்களில் விரிவான தகவல்களை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என நாம் விரும்பினாலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு முக்கியமான நிறுவனங்கள் நியாயமாகவே செயல்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு மலேசியப் பங்குச் சந்தை ஆணையத்தில் (SC) நடைபெற்ற மலேசியா மடாணி அறிஞர்கள் மன்றத்தின் 12-வது தொடரில் உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில், நிதி அமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான், மலேசியப் பங்குச் சந்தை ஆணையத்தின் தலைவர் டத்தோ முகமட் ஃபைஸ் அஸ்மி மற்றும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிதியமைச்சருமான அன்வார், நீண்டகாலமாக நிலவி வரும் கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஊழலை எதிர்த்துப் போராடவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற் கொண்டு வருவதாகக் கூறினார்.
பல தசாப்தங்களாக நடந்து வந்த ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பலவீனமான நிர்வாகம் ஆகியவை ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான வாய்ப்புகளைப் பறித்துவிட்டன என்றார் அவர்.
சிறந்த நிர்வாகம், கல்வியில் சீர்திருத்தங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய அரசாங்கம் தற்போது கடுமையாக உழைத்து வருகிறது.
பழைய அமைப்பிலேயே வசதியாக வாழப் பழகிவிட்ட சில தரப்பினர் மற்றும் சில அரசியல் கூட்டாளிகளிடம் இருந்து வரும் எதிர்ப்புகளால், சீர்திருத்த முயற்சிகளை முன்னெடுப்பது பல நேரங்களில் கடினமாகி விடுகிறது என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.
மலேசியா தொடர்ந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பது குறித்த கவலைகளையும் அவர் ஒப்புக்கொண்டார். பொருளாதார மதிப்புச் சங்கிலியில் நாடு முன்னேற வேண்டுமானால், குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நிரந்தரமாகச் சார்ந்திருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
"உள்ளூர் மனிதவளத்தை வலுப்படுத்துவதற்கு, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் சார்ந்திருக்காமல் தொழில்துறையினர் போட்டித்தன்மையுடன் இயங்குவதை உறுதிசெய்யவும், தொழில்நுட்பம் மற்றும் தொழிற் கல்வி பயிற்சி (TVET) நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பயிற்சிகளை அரசாங்கம் விரிவுபடுத்தி வருகிறது," என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, மலேசிய மூலதனச் சந்தை உருமாற்றத் திட்டம், பொருளாதார அடிப்படைகளை வலுப்படுத்துவதன் மூலமும், உள்நாட்டு முதலீட்டுக் குழுக்களைச் செயல்படுத்துவதன் மூலமும் மூலதனத்தை நீண்டகாலத் திறனாக மாற்றுவதையே மையமாகக் கொண்டுள்ளது என்று அமீர் ஹம்சா கூறினார்.
"இது மலேசியாவின் முதலீட்டுத் திறனை அதிகரிப்பது மட்டுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை திறன்களை வலுப்படுத்துகிறது. மேலும், தனிநபர் முதலீடுகளிலிருந்து ஒரு பெரிய பிராந்தியச் சூழலமைப்பு மற்றும் தளமாக வளரவும் இது வழிவகுக்கிறது.
"சரியான அடிப்படை இல்லாமல் எதையும் உருவாக்க முடியாது. நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது; ஏனெனில் நம்பிக்கை ஆழமாக வேரூன்றும்போது, ஒரு நாட்டை உருவாக்குவதற்கு மூலதனம் உதவுவது மிகவும் எளிதாகிவிடும்," என்று அவர் தெரிவித்தார்.
நுண் நிதியுதவித் திட்டங்கள், கடன் உத்தரவாதங்கள் மற்றும் வீட்டு வசதி நிதியுதவி ஆகியவற்றின் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்கள் (SME) பின்தங்கி விடாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்கிறது.
மேம்பட்ட செமிகண்டக்டர் பேக்கேஜிங் (advanced semiconductor packaging), செயற்கை நுண்ணறிவு (AI), தரவு மையங்கள் (data centers) மற்றும் மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (E&E) துறைகளில் செய்யப்படும் முதலீடுகள், மதிப்புச் சங்கிலியில் மலேசியா மேலும் முன்னேறுவதற்கான முயற்சிகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"முதலீட்டாளர்கள் இங்கு வருவது மட்டுமின்றி, தொடர்ந்து இங்கேயே தங்கி வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய, மலேசியா தனது சூழலமைப்பு, திறன் மற்றும் தகுதிவாய்ந்த மனிதவளத்தை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
GLC-களின் வியூக முதலீடுகளுக்கு வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம் அவசியம் - பிரதமர்
23 மே 2026, 6:37 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?




