குவாந்தான், மே 23 (பெர்னாமா) -- கல்வித் துறையில் பல்லாண்டுகள் சேவை செய்த பிறகு, ஓய்வு என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல என்பதை பகாங்கைச் சேர்ந்த இரு முன்னாள் ஆசிரியர்கள் நிரூபித்துள்ளனர்.
ஊடகத் துறையில் தங்களின் ஆர்வத்தைத் தொடர பகுதிநேர பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் சமூகத்திற்குத் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.
பெர்னாமாவிடம் பேசிய சலேஹுடின் மாட் ரசாட் (68), எழுத்துத் துறையில் தனது ஆரம்பக் கட்ட ஈடுபாடு, உத்துசான் மலாயுவின் மாணவர் பதிப்பான 'உத்துசான் பெலாஜார்' இதழில் தனது செய்திகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வெளியானபோது தொடங்கியதாகக் கூறினார்.
ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, 1985 டிசம்பர் 1-ஆம் தேதி உத்துசான் மலேசியா பகாங்கின் 'ஸ்ட்ரிங்கராக' (பகுதிநேர செய்தியாளர்) தனது பயணம் தொடங்கியதாக அவர் கூறினார். எழுதும் பணி, செய்தி சேகரிப்பு மற்றும் செய்தித் திரட்டல் போன்றவற்றை மாலை, இரவு மற்றும் வார இறுதி நாட்களில் மேற்கொண்டுள்ளார்."ஓய்வுக்குப் பிறகு, பத்திரிகைத் துறை எனது முக்கிய கவனமாக மாறியது, ஏனெனில் அது என்னை தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கவும், சமூகத்திற்குப் பங்களிக்கவும், நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் வழிவகுக்கிறது.
"பகாங் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருப்பதால், இந்தக் தொழில் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது," என்று 38 ஆண்டுகள் மலாய் மொழியில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியராகப் பணியாற்றிய சலேஹுடின் கூறினார்.
இவர் புவியியல் மற்றும் வரலாற்றுப் பாடங்களையும் கற்பித்துள்ளார். பெக்கான், கம்போங் செராம்பியைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், தனது ஆசிரியர் பணி அனுபவம் பத்திரிகைத் துறைக்கு மிகவும் உதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ஏனெனில் அந்தத் தொழில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் சமூகம் உட்பட பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களுடன் பழகும் வாய்ப்பை அவருக்கு வழங்கியது.
"ஒரு ஆசிரியராக, மனித உணர்வுகளைக் கேட்பதற்கும், கவனிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நான் பழகிவிட்டேன். சமநிலையான, உண்மையான மற்றும் சமூகத்தின் யதார்த்தத்திற்கு நெருக்கமான செய்தி அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு அந்தத் திறன்கள் பெரிதும் உதவுகின்றன," என்றார் அவர்.
1980-களில் தொலைபேசி வழியாக செய்திகளை வாசிப்பது அல்லது தொலைநகல் (fax) இயந்திரம் மூலம் அனுப்புவது போன்ற முறைகளுடன் ஒப்பிடுகையில், தொழில்நுட்ப வளர்ச்சி செய்தியாளர்களின் பணி முறையை மாற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.
"அப்போது, பொதுத் தொலைபேசி வசதிகள் குறைவாகவும், முக்கிய நகரங்களில் மட்டுமே இருந்தன. இன்றோ, தொழில்நுட்பம் மிக விரைவாக செய்திகளை அனுப்ப உதவுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு ஓய்வுபெற்ற ஆசிரியரான அமீர் ஹம்சா நோர்டின் (66), ஊடகத் துறையில் தனது ஆர்வம் இடைநிலைப் பள்ளியில் படிக்கும்போதே தொடங்கி, பின்னர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தீவிரமாக வளர்ந்ததாகக் கூறினார்.
பள்ளி நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய மாதாந்திர பள்ளி செய்தி இதழை A4 தாள்களைப் பயன்படுத்தி வெளியிட்டதாகவும், பள்ளி இதழின் செயற்குழு உறுப்பினராகவும், மலேசிய மேற்குக் கூட்டரசு மலாய் ஆசிரியர் சங்கத்தின் (KGMMB) 'சுவாரா குரு' இதழின் தலைமை ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
1995-இல் 'ஹரியான் வாத்தான்' பத்திரிகையில் ஸ்ட்ரிங்கராகத் தொடங்கி, பின்னர் 1997 முதல் அக்டோபர் 2018 வரை 'பெரித்தா ஹரியான்' பத்திரிகையிலும், ஏப்ரல் 2023 முதல் மீண்டும் 'தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்' (NSTP) உடனும் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அமீர் ஹம்சா கூறினார்."ஆசிரியராக இருந்தபோது ஸ்ட்ரிங்கராகப் பணியாற்றியபோதும், எனது முக்கிய கடமைகளை நான் ஒருபோதும் புறக்கணித்ததில்லை.
மேலும், மூன்று முறை சிறந்த சேவைக்கான விருதையும் பெற்றுள்ளேன்," என்றார் அவர்.1990-ஆம் ஆண்டு சுங்கை தெம்பிலிங்கில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதை செய்தி சேகரிக்கச் சென்றது தனது மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
அப்போது, விபத்து நடந்த இடத்தில் புகைப்படம் எடுக்க மற்றொரு பத்திரிகையின் புகைப்படக் கலைஞரின் உதவியை நாட வேண்டியிருந்தது."அந்தப் புகைப்படக் கலைஞர், ஆற்றின் நடுவே இருந்த விமானத்தின் சிதைவுகளுக்கு அருகில் இருந்து கேமரா ஃபிலிமை ஆற்றங்கரையில் இருந்த என்னிடம் வீசினார்.
பின்னர், குவாந்தானுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மற்றொரு செய்தியாளரிடம் அந்த ஃபிலிமைக் கொடுத்து செயலாக்க அனுப்பினேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
ஓய்வுக்குப் பிறகு ஸ்ட்ரிங்கராகப் பணியாற்றுவது மனநிறைவைத் தருவதாக அமீர் ஹம்சா கூறினார். ஏனெனில், இது அவரை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தேவைப்படும் மக்களுக்கு உதவி கிடைக்க செய்தி அறிக்கைகள் மூலம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
"வியட்நாமின் ஹோ சி மின் நகரில் சுற்றுலா சென்றபோது கோமா நிலைக்குச் சென்ற ஒரு மலேசியருக்கு நிதி உதவி தேவைப்பட்ட ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. அது குறித்த செய்தி, அவருக்கு நன்கொடைகள் கிடைக்க மறைமுகமாக உதவியது," என்றார் அவர்.-- பெர்னாமா








