எவரெஸ்ட் சிகரத்தை ஏறி 29 ஆண்டுகள்: ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிட்ட தருணங்களை நினைவுகூர்ந்தார் மகேந்திரன்

23 மே 2026, 4:26 AM
எவரெஸ்ட் சிகரத்தை ஏறி 29 ஆண்டுகள்: ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிட்ட தருணங்களை நினைவுகூர்ந்தார் மகேந்திரன்

ஷா ஆலம், மே 23: டத்தோ எம். மகேந்திரன் மற்றும் டத்தோ என். மோகனதாஸ் ஆகிய இரு மலேசியர்கள், 1997ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் மலையை வெற்றிகரமாக ஏறிச் சாதனை படைத்து, இவ்வாண்டுடன் சரியாக 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு நிறைவை முன்னிட்டு வழங்கிய நேர்காணலில், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்த போதிலும், எவரெஸ்ட் சிகரத்தில் நின்ற அந்தத் தருணம் இன்னும் தனது நினைவில் பசுமையாக இருப்பதாக மகேந்திரன் கூறினார்.

இந்த வெற்றி வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, எதையும் சாதிக்க முடியும் என்ற அப்போதைய மலேசியர்களின் நம்பிக்கையின் அடையாளமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

"திரும்பிப் பார்க்கும்போது, நான் இன்னும் உணர்ச்சிவசப்படுகிறேன். சிகரத்தை அடைந்ததற்காக மட்டுமல்ல, அந்தப் பயணத்தின் நெடுகிலும் நாங்கள் அங்கு சென்றடைவது சாத்தியமற்றது என்று பலர் கூறியதாலும்தான்."

"'மலேசியர்களால் உண்மையிலேயே இதைச் செய்ய முடியுமா?' என்பது போலத்தான் மக்கள் எங்களைப் பார்த்தார்கள். அதனால், அந்த உச்சியில் நின்றபோது ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று அவர் கூறினார்.

நேப்பாள நேரப்படி காலை 11.55 மணிக்கு மகேந்திரன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அவரைத் தொடர்ந்து 15 நிமிடங்களுக்குப் பிறகு மோகனதாஸ் அங்கு சென்றடைந்தார். இதன் மூலம், 8,848 மீட்டர் உயரமுள்ள மலையை ஏறிய முதல் மலேசியர்கள் மற்றும் தென்கிழக்காசியர்களில் முதன்மையானவர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றனர்.

உலகின் உச்சியில் மலேசிய தேசியக் கொடியான 'ஜாலூர் கெமிலாங்'-கை பறக்கவிட்ட அந்தச் செயல், தனது வாழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

"சிகரத்தில் ஜாலூர் கெமிலாங்கைப்
பறக்கவிட்ட போது, ஒட்டுமொத்த மலேசியர்களும் எங்களுடன் இருப்பது போல் உணர்ந்தேன். அந்த நேரத்தில் மிகவும் பெருமையாக இருந்தது. உடல் சோர்வு, குளிர்... என அனைத்தும் ஒரு கணத்தில் மறைந்துவிட்டது போல் இருந்தது," என்றார் அவர்.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் மலேசிய மலையேறுவோர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், 10 மலேசிய மலையேறுபவர்கள் பங்கேற்ற மலேசியா-எவரெஸ்ட் '97 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த
பயணம் அமைந்தது.

இந்த வெற்றி உடல் வலிமையை மட்டுமே சார்ந்திருக்கவில்லை, மாறாக மலையேறும் சக நண்பர்களிடையே இருந்த நம்பிக்கை, முயற்சி
மலேசியர்களால் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்ற உறுதியையும் பொறுத்திருந்தது என்று மகேந்திரன் கூறினார்.

"எங்களை அந்த உச்சிக்குக் கொண்டு சென்றது எது என்று கேட்டால், அது உடல் வலிமை மட்டுமல்ல. நாங்கள் ஒருவரையொருவர் நம்பினோம், அதாவது
வாய்ப்பளிக்கப்பட்டால் மலேசியர்களால் சாதிக்க முடியும் என்று நம்பினோம்," என அவர் விளக்கினார்.

'மரண மண்டலம்' (death zone) எனப்படும் ஆபத்தான பகுதியில் இருக்கும்போது மட்டுமல்ல, அதிக மன உறுதி தேவைப்படும் முழுப் பயணமுமே உண்மையான சவாலாக அமைந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். தீவிரமான வானிலை, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் அதீத சோர்வு ஆகியவை எவரெஸ்ட் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் மிகவும் சவாலானதாக மாற்றியதாக அவர் கூறினார்.


"சில நேரங்களில் ஒரு அடி எடுத்து வைப்பது கூட மிகவும் கடினமாகத் தோன்றும். ஐந்து, ஆறு அடிகள் நடந்த பிறகு, நீண்ட நேரம் மூச்சு வாங்குவதற்காக நிற்போம். உண்மையில் உடலோடு போராடியதை விட மனதுடன்தான் அதிகம் போராடினோம்" என்று அவர் மேலும் கூறினார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்த வெற்றி திடீரென நடந்த ஒன்றல்ல, மாறாக பல மாத காலப் பயிற்சி, மிகப்பெரிய தியாகம் மற்றும் குழுவில் இருந்த ஒவ்வொருவரின் ஒழுக்கம் ஆகியவற்றின் விளைவாகும் என்றார் அவர்.

29 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், அவர் இன்றும் மலையேறும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும், விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் கனவுகளைத் துரத்தும் தைரியம் குறித்து இளைய தலைமுறையினருடன் தனது அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

"நான் இளைஞர்களைச் சந்திக்கும்போது எப்போதும் சொல்வது ஒன்றுதான்... முயற்சி செய்யப் பயப்பட வேண்டாம். முதல் அடியை எடுத்து வைக்கா
விட்டால், நாம் எங்கு சென்று சேர முடியும் என்பது நமக்குத் தெரியாது," என்றார் அவர்.

"நான் ஒரு மலையேறும் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன் அல்ல. பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டு, அதனை அடைவதற்காகக் கடுமையாக உழைக்கத் தயாராக இருந்த ஒரு சாதாரண மலேசியன் மட்டுமே.

எனவே, ஒழுக்கமும் மன உறுதியும் இருந்தால் யாராலும் அசாதாரணமான விஷயங்களைச் சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்றார் அவர்

நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை மற்றும் பங்களிப்பிற்காக, மகேந்திரன் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

அவற்றில், 2011ஆம் ஆண்டில் 'டத்தோ' விருதை உள்ளடக்கிய Panglima Jasa Negara (PJN), 2004இல் Darjah Setia Mahkota Malaysia (JSM), மற்றும் 1997இல் Kesatria Mangku Negara (KMN) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

2010ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தின் Darjah Setia Pangkuan Negeri (DSPN) 'டத்தோ' விருதும், 1999இல் Ahli Mahkota Selangor (AMS) விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில், எவரெஸ்ட் ஏறிய சாதனையைப் பாராட்டி, 2003ஆம் ஆண்டில் நேபாள அரசு அவருக்கு 'எவரெஸ்ட் பொன்விழாக் கொண்டாட்டப் பதக்கத்தை' வழங்கிக் கௌரவித்தது.

"என்னைப் பொறுத்தவரை, இந்த அங்கீகாரங்கள் எனக்கானது மட்டுமல்ல. இந்தப் பயணத்தில் ஈடுபட்ட அனைவருக்கும், ஆரம்பம் முதலே எங்களை நம்பி ஆதரவளித்த மலேசிய மக்களுக்கும் உரித்தானதாகும்," என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

1997ஆம் ஆண்டு படைக்கப்பட்ட இந்தச் சாதனை, நாட்டின் விளையாட்டுத் துறையில் மிக முக்கிய வரலாற்றுத் தருணமாகத் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. மேலும், உலகிலுள்ள மிக உயர்ந்த சிகரங்களை ஏறிச் சாதனை படைக்க எண்ணற்ற மலேசியர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகவும் ஊக்கமாகவும் அமைந்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.